Header Ads Widget

பந்த்: அரசுக்கு ரூ.5.20 கோடி நஷ்டம்; பி.எஃப்.ஐ செலுத்த தவறினால் நிர்வாகி சொத்து பறிமுதல்- நீதிமன்றம்

நாடுமுழுவதும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களிலும், நிர்வாகிகளின் வீடுகளிலும் கடந்த 22-ம் தேதி என்.ஐ.ஏ அதிரடி சோதனை நடத்தியது. அதைக் கண்டித்து கேரளாவில் கடந்த 23-ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அரசு பஸ்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. ஆர்.எஸ்.எஸ் அலுவலகங்களில் குண்டுவீச்சு சம்பவங்களும் நடந்தன. இந்த நிலையில், கேரளாவில் வேலை நிறுத்தப் போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டதாக 487 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. நேற்றுவரை 1,992 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். 687 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். கேரளத்தில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த வேண்டுமானால் 7 நாள்களுக்கு முன்பு அறிவிக்கவேண்டும் எனவும், திடீர் பந்த் அறிவிக்கக்கூடாது எனவும் கோர்ட் வழிகாட்டியிருக்கிறது. அதை மீறி திடீர் பந்த் நடத்தியதைத் தொடர்ந்து அதிருப்தியடைந்த கேரள ஐகோர்ட் அதுபற்றி தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.

கேரள உயர் நீதிமன்றம்

``வேலை நிறுத்தப் போராட்டம் நடந்த தினத்தன்று பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?" என போலீஸிடம் கேரள ஐகோர்ட் கேள்வி எழுப்பியது. இந்த நிலையில், நேற்று இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள் ஜெயசங்கரன் நம்பியார், முஹம்மது ரியாஸ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், ``மாநிலம் முழுவதுமுள்ள அனைத்து வழக்கிலும் பி.எஃப்.ஐ மாநில பொதுச்செயலாளர் அப்துல் சத்தாரை குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும்" என உத்தரவிட்டது. மேலும், வேலை நிறுத்தப் போராட்டத்தின்போது சேதப்படுத்தப்பட்ட பொதுச் சொத்துக்களுக்கான நஷ்டஈடு தொகையை வேலை நிறுத்தம் அறிவித்த நிர்வாகியிடமே வசூலிக்க கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.

கேரள அரசு, கே.எஸ்.ஆர்.டி.சி-யிடமிருந்து பெறப்பட்ட அறிக்கையின்படி வேலை நிறுத்தப் போராட்டத்தில் பொதுச் சொத்துக்கள் உடைக்கப்பட்டதால் மொத்தம் 5.20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக அரசு தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்தவர் 5.20 கோடி ரூபாயை நஷ்டஈடாக செலுத்த வேண்டும் என கேரளா ஐகோர்ட் டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டிருக்கிறது. மேலும், அந்தத் தொகையை உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளரிடம் இரண்டு வாரங்களில் செலுத்த வேண்டும். அந்தத் தொகையை செலுத்தத் தவறினால் வருவாய் மீட்பு சட்டத்தின்படி நிர்வாகிகளின் சொத்துகளை ஜப்தி செய்து நடவடிக்கை எடுக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

கைதுசெய்யப்பட்ட நிர்வாகிகள்

கேரள மாநிலம் முழுவதும் வன்முறை காரணமாகக் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் கொடுக்கும் முன்பு அவர்கள் சேதத்துக்கான தொகையை செலுத்தியிருப்பதை உறுதிபடுத்தும்படி மாஜிஸ்திரேட் கோர்ட் மற்றும் செஷன்ஸ் கோர்ட்டுகளுக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. வேலை நிறுத்தப் போராட்டம் அதிகமாக நடக்கும் கேரளத்தில், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினால் அதற்கான இழப்பீட்டை பந்த் அறிவித்த அமைப்பின் நிர்வாகிகளிடம் வசூலிக்க கோர்ட் உத்தரவிட்டிருப்பது முன்மாதிரி நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்