பீகார் மாநிலத்தில், பள்ளி மாணவி ஒருவர் தேர்வுத் துண்டுச் சீட்டை காதல் கடிதம் எனத் தவறாக நினைத்ததையடுத்து, 12 வயது சிறுவன் ஒருவன் மாணவியின் உறவினர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த திங்களன்று, கொலைசெய்யப்பட்ட சிறுவனின் உடல்பாகங்களை ரயில் தண்டவாளத்திலிருந்து மீட்ட போலீஸார், இதுதொடர்பாக 9 பேரை கைது செய்தனர். மேலும், கொலைசெய்யப்பட்ட சிறுவன், உத்வந்த்நகர் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த 5-ம் வகுப்பு படிக்கும் தயா குமார் என்று தெரியவந்திருக்கிறது.
இந்தநிலையில், இந்த சம்பவம் குறித்து ஊடகத்திடம் பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், ``5-ம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவன், கடந்த அக்டோபர் 13-ம் தேதியன்று தன் சகோதரியுடன் பள்ளிக்குச் சென்றிருக்கிறார். அன்று சிறுவனின் சகோதரி, வகுப்பறையில் தேர்வெழுதிக்கொண்டிருக்கும்போது, தேர்வுத் துண்டுச் சீட்டு ஒன்றை தன் சகோதரியின்மேல் சிறுவன் வீசியிருக்கிறான். ஆனால், அது தவறுதலாக வேறொரு மாணவிக்கு அருகில் விழுந்திருக்கிறது. இதனை அந்த மாணவி காதல் கடிதம் என்று தவறாக நினைத்துக்கொண்டு, தன்னுடைய சகோதரிகளிடம் இதுபற்றி கூறியிருக்கிறார்.
இதையடுத்து, மாணவியின் சகோதரர்கள் சம்பவ இடத்துக்கே வந்து சிறுவனைத் தாக்கி கடத்திச்சென்றாக, சிறுவனின் குடும்பத்தினர் புகாரளித்திருக்கின்றனர். அதைத்தொடர்ந்து, நான்கு நாள்களுக்குப் பின்னர் சிறுவனின் உடல்பாகங்கள் மீட்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் 4 சிறார்கள் மற்றும் மாணவியின் குடும்பத்தினர் என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதில் சிறார்கள் 4 பேரும் சிறுவர் சீர்திருத்த இல்லத்துக்கு அனுப்பப்பட்டனர், மற்றவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர்'' எனத் தெரிவித்திருக்கிறார். 12 வயது சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
from Latest News

0 கருத்துகள்