கேரள மாநிலம், பத்தனம்திட்டா இலந்தூரில் இரட்டை நரபலி வழக்கில் கைதுசெய்யப்பட்ட முதல் குற்றவாளியான முஹம்மது ஷாஃபி, இரண்டாம் குற்றவாளியான லைலா, அவரின் கணவரான பாரம்பர்ய வைத்தியர் பகவல் சிங் ஆகியோருக்கு 12 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டிருக்கிறது. விசாரணைக்குப் பிறகு வரும் 24-ம் தேதி மீண்டும் அவர்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது. நேற்று கொச்சியிலுள்ள போலீஸ் கிளப்பில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் முதற்கட்டமாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
முஹம்மது ஷாஃபி, மனைவி பிள்ளைகளுடன் எர்ணாகுளத்தில் வாடகைக்கு வசித்துவருகிறார். அங்கு ஓட்டலும் நடத்திவந்திருக்கிறார். நரபலிக்காக பத்மாவைத் தனது ஓட்டலுக்கு வரவழைத்து, பின்னர் அங்கிருந்து காரில் இலந்தூருக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அந்த சிசிடிவி காட்சிகள்தான் முதல் ஆதாரமாக போலீஸிடம் சிக்கியிருக்கின்றன.
முதலில் ரோஸ்லி நரபலி கொடுக்கப்பட்ட பிறகு ஏன் அதற்கான பலன் கிடைக்கவில்லை என முஹம்மது ஷாஃபியிடம் பகவல் சிங்கும், லைலாவும் கேட்டிருக்கின்றனர். அதற்கு முஹம்மது ஷாஃபி, `முதல் நரபலியில் கொடூரம் குறைவாக இருந்ததாலும், வேகமாகக் கொன்று நரபலியை முடித்துக்கொண்டதாலும்தான் பலன் கிடைக்கவில்லை. கொடூரம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்குப் பலன் கிட்டும்’ எனக் கூறி பகவல் சிங்கையும், அவரின் மனைவி லைலாவையும் நம்பவைத்திருக்கிறார். அதனால்தான் இரண்டாவதாக நரபலி கொடுத்த தருமபுரி பத்மாவைத் துடிதுடிக்க நீண்ட நேரம் சித்திரவதை செய்து நரபலி கொடுத்திருக்கின்றனர்.
பத்மாவின் கழுத்தை நைலான் கயிற்றால் இறுக்கி, அவரை மயக்கநிலைக்குக் கொண்டுசென்றுள்ளனர். பின்னர் அவரின் உடல்களை வெட்டித் துண்டாக்கியுள்ளனர். அப்போது அவரின் உடலில் உயிர் இருந்ததால், உடல் பாகங்கள் துடித்திருக்கின்றன. நீண்ட நேரம் மிகவும் கொடுமைப்படுத்தியுள்ளனர். பின்னர் இரண்டு மரக்கட்டைகளைவைத்து 56 துண்டுகளாக உடலை வெட்டி பக்கெட்டில் போட்டிருக்கின்றனர். பக்கெட்டுடன் வீட்டுக்கு வெளியே எடுத்துச் சென்று உப்பு, சில்லறைக் காசுகள் போன்றவற்றைக் குழியில் போட்டு, உடலைப் புதைத்திருக்கின்றனர்.
முன்பு இறைச்சி வெட்டும் கடையில் வேலை பார்த்ததால், வெட்டுக்கத்தியால் பத்மாவின் உடலை அசால்ட்டாக கூறுபோட்டிருக்கிறார் முஹம்மது ஷாஃபி. பத்மாவின் நகைகள் சுமார் 39 கிராம் எடை இருந்திருக்கிறது. அதை தனியார் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் கொடுத்து ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் வாங்கியிருக்கிறார் முஹம்மது ஷாபி. முஹம்மது ஹாஃபி மீது கஞ்சா விற்பனை, 75 வயது மூதாட்டி குரூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு என எட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கஞ்சா விற்பனையின்போது சில மாணவிகளையும் தவறாகப் பயன்படுத்தியதாக முஹம்மது ஷாஃபி மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.
ரத்தத்தைக் கண்டால் சந்தோஷப்படும் கொடூர குணம் படைத்தவர் முஹம்மது ஷாஃபி என்கிறார்கள். அதனால்தான் நரபலி சமயத்தில் ரத்தத்தைப் பார்த்து சந்தோஷம் அடைந்திருக்கிறார். மறுபடியும் நரபலி கொடுக்கும் எண்ணத்தை தம்பதியிடம் தூண்டியிருக்கிறார். அதுபோல பூஜையின் ஒரு பகுதி என, லைலாவை அவரின் கணவரான பகவல் சிங் முன்னிலையிலேயே உடலுறவு கொண்டிருப்பதும் தெரியவந்திருக்கிறது. மேலும் லைலாவை அடைய முஷமது ஷாஃபி திட்டம் தீட்டியதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
இதற்கிடையே முஹம்மது ஷாஃபி பயன்படுத்திய ஸ்ரீதேவி என்ற போலி ஃபேஸ்புக் பக்கத்தை சைபர் க்ரைம் போலீஸார் மீட்டெடுத்துள்ளனர். அதில் பகவல் சிங்கிடம் பெண் போன்று சாட் செய்த மெசேஜ்களை மீட்க போலிஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். இது, இந்த வழக்கில் முக்கியத் திருப்பமாகக் கருதப்படுகிறது. மேலும், கொச்சியில் காணாமல்போன பெண்கள் குறித்த வழக்கை மீண்டும் விசாரித்து, அதில் யாராவது நரபலி கொடுக்கப்பாட்டிருக்கிறார்களா என விசாரணை நடத்தவிருப்பதாக கொச்சி சிட்டி போலீஸ் கமிஷனர் நகராஜூ தெரிவித்திருக்கிறார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/GxjIL9b
via IFTTT

0 கருத்துகள்