Header Ads Widget

``ரஷ்யாவுடன் நேட்டோ மோதினால், உலகளாவிய பேரழிவை சந்திக்க வேண்டியிருக்கும்" - எச்சரிக்கும் புதின்

ரஷ்ய ராணுவத்துடன் நேட்டோ படையினரின் நேரடித் தொடர்போ அல்லது நேரடி மோதலோ `உலகளாவிய பேரழிவுக்கு’ வழிவகுக்கும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்திருக்கிறார். முன்னதாக, கடந்த மாதம் உக்ரைனின் நான்கு பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்தப்பிறகு ரஷ்ய நிலப்பரப்பைப் பாதுகாக்க அணு ஆயுதங்களைப் பயன்படுத்தப் போவதாக புதின் தெரிவித்திருந்தார்.

ஜி-7 நாடுகள் மாநாடு

புதினின் இந்த எச்சரிக்கையை ஐ.நா. இந்த வாரம் கண்டித்திருந்தது. மேலும், கடந்த செவ்வாயன்று, ஜி7 நாடுகள் உக்ரைன் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "ரஷ்ய அதிபர் புதினின் அணு ஆயுத எச்சரிக்கை சிரித்து கடந்துப் போவதற்கல்ல. அதன் விளைவுகள் மிக கொடுமையானது. அதனால், ரஷ்யாவும் பாதிக்கப்படும்" எனத் தெரிவித்திருந்தார்.

ரஷ்யாவின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, "அணு ஆயுதத் தாக்குதலுக்கு ரஷ்யா தயாரானால், உலகம் ஒருபோதும் அதை மன்னிக்காது என்பதை புதின் நன்கு புரிந்துகொண்டிருக்கிறார். அணு ஆயுதங்களைப் பயன்படுத்திய பிறகு, அவர் தன் உயிரைக்கூடப் பாதுகாக்க முடியாது என்பதை அவர் புரிந்துகொண்டிருக்கிறார். நான் அதில் உறுதியாக இருக்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.

ரஷ்ய அதிபர் புதின்

இந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ``ரஷ்ய இராணுவத்துடன் NATO ராணுவ வீரர்கள் நேரடியாக தொடர்புகொண்டாலோ, அல்லது நேரடி மோதலை நிகழ்த்தினால், உலகளாவிய பேரழிவிற்கு அது வழிவகுக்கும்.

மேலும், இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தை விளைவிக்கும். எனவே புத்திசாலிகள் இது போன்ற ஒரு நடவடிக்கையை எடுக்க ஆதரவளிக்கமாட்டார்கள்" என எச்சரிக்கும் விதமாக கருத்து தெரிவித்திருக்கிறார்.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்