Header Ads Widget

``தேவர் குருபூஜைக்கு பிரதமர் வருகிறாரா..?!" - அமெரிக்காவில் இருந்து திரும்பிய அண்ணாமலை பதில்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டுவார கால பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். அவரது உயர் கல்வி தொடர்பாக சென்றதாகவும், கட்சிப் பணிக்காக மேலிடத்தில் அனுமதிப் பெற்று சென்றதாகவும் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. மேலும், அமெரிக்கா சென்ற அண்ணாமலை அங்கு இருக்கும் பா.ஜ.க ஆதரவாளர்களை சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாற்றினார். இந்த நிலையில், அமெரிக்கா சென்ற அண்ணாமலை இன்று இந்தியா திரும்பினார்.

ஸ்டாலின் - அண்ணாமலை

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ``இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் என்பது, தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக இருக்கும் தி.மு.க-வின் மீது இருக்கும் மக்களின் கோபத்தை மறைக்க பயன்படுத்தப்படுகிறது. 70 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திராவிட கட்சிகளின் அமைச்சர்கள் இதுவரை இரண்டாம் வகுப்பு வரை கூட தமிழை தான் பயிற்சி மொழியாக வைப்போம் என பேசியதில்லை. அதை சொல்வதற்கு நரேந்திர மோடி 2020-ல் நமக்கு தேவைப்பட்டிருக்கிறார்.

ஒருவேளை மத்திய அரசு தேர்வுகளை இந்தி மொழியில் தான் நடத்த வேண்டும் என எப்போது சொன்னாலும் அதை தமிழக பா.ஜ.க எதிர்க்கும். அதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. ஆனால் மத்திய பா.ஜ.க அரசு அதை செய்யாது. மூன்றாவது மொழியாக எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம் என்பதுதான் புதிய கல்விக் கொள்கை.

A கேட்டகிரி, B கேட்டகிரி, C கேட்டகிரி என்பது பா.ஜ.க கொண்டுவந்ததல்ல. அது 1965 காலகட்டத்தில் காங்கிரஸ் கொண்டுவந்தது. எனவே A கேட்டகிரி மாநிலங்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி நமக்கு கவலை இல்லை. அதனால் தி.மு.க இதுபோன்ற அரசியலை கைவிட்டு விட்டு மக்களுக்கு தேவையான அரசியலை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

எதிர்வரும் 30-ம் தேதி நடைபெற இருக்கும் குருபூஜைக்கு பிரதமர் மோடி வருவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் பா.ஜ.க-வினுடைய விருப்பம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எல்லா தலைவர்களின் குருபூஜைக்கும் வரவேண்டும் என்பதுதான். 2023-ல் பிரதமர் குருபூஜைக்கு வர வேண்டும் என்ற கோரிக்கை வைப்போம்.

அண்ணாமலை

தமிழ்நாட்டில் தற்போதைய புது ஃபேஷன் யார் இந்து என்பதை கண்டுபிடிப்பது தான். முக்கியமான விஷயங்களை விட்டுவிட்டு அதை திசை திருப்பக் கூடிய வேலைகளை தி.மு.க செய்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி கோலோச்சுகிறது. குடும்பத்திற்குள்ளே பதவிகள் கொடுத்துக் கொள்கிறார்கள். இவர்கள் ஜனநாயகத்தை பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது?" எனத் தெரிவித்திருக்கிறார்.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்