Header Ads Widget

Doctor Vikatan: அடிக்கடி கிளம்பும் மர்மக்காய்ச்சல் பீதி... உண்மையில் மர்மக்காய்ச்சல் என்பது உண்டா?

Doctor Vikatan: மர்மக்காய்ச்சல் பரவுவதாகவும், அதனால் உயிரிழப்பதாகவும் அடிக்கடி கேள்விப்படுகிறோம். அதென்ன மர்மக்காய்ச்சல்... அதை எந்த டெஸ்ட்டிலும் கண்டுபிடிக்க முடியாதா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி...

மருத்துவர் பூங்குழலி

எல்லா காய்ச்சலுமே காரணம் கண்டறியப்படும்வரை மர்மக் காய்ச்சல்தான். அறிகுறிகளை வைத்துதான் அது எந்த வகையான காய்ச்சலாக இருக்க முடியும் என யூகிக்க முடியும்.

மர்மக்காய்ச்சல் என சொல்லப்படும் எல்லா காய்ச்சல் வகைகளையுமே கண்டறிய சோதனைகள் இருக்கின்றன. சில நேரங்களில் அதற்குரிய பரிசோதனைகளைச் செய்வதற்கு முன்பே காய்ச்சல் சரியாகிவிடும். அதாவது சிலவகை வைரஸ் தொற்றுகள் மிகவேகமாகப் பரவி, வந்த வேகத்தில் சட்டென குணமாகிவிடும். குறிப்பாக சீதோஷ்ணநிலை மாறும்போது வரும் காய்ச்சல் வகைகள் பெரும்பாலும் இப்படித்தான்.

இப்படி பரிசோதனை செய்து காரணம், கண்டறிவதற்குள் வந்து குணமாகும் காய்ச்சலை ஊடகவெளியில் மர்மக்காய்ச்சல் என்று சொல்கிறார்கள். மற்றபடி மர்மக்காய்ச்சல் என்று எதுவும் இல்லை. காய்ச்சல் வந்தால், அது 2-3 நாள்களுக்கு மேல் தொடர்ந்தால் அதற்கான பரிசோதனையை மேற்கொண்டு, சரியான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

காய்ச்சல்

சில வகை காய்ச்சல், மருந்துகளின் தேவையின்றி தானாகவே சரியாகிவிடும். அவற்றை 'செல்ஃப் லிமிட்டிங்' என்று சொல்வோம். மற்றபடி மர்மக்காய்ச்சல் என்பது பரபரப்புக்காக சொல்லப்படுகிற வார்த்தைதானே தவிர, உண்மையில் அப்படி எதுவும் இல்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்