Header Ads Widget

Doctor Vikatan: தினமும் ஷாம்பூ குளியல் எடுப்பது சரியா, தவறா?

Doctor Vikatan: சிலர் தினமும் தலைக்குக் குளிப்பது நல்லது என்கிறார்கள். இன்னும் சிலர், அது கூந்தலை பாதிக்கும் என்கிறார்கள். இரண்டில் எது சரி? தினமும் ஷாம்பூ குளியல் எடுப்பது சரியா, தவறா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்

கீதா அஷோக்

தினமும் தலைக்குக் குளிப்பதில் தவறே இல்லை. அதிலும் இன்றைய காலகட்டத்தில் அனேகமாக எல்லோரும் ஏதோ ஒரு வேலை காரணமாக வெளியே சென்று வருகிறோம். வெளியில் உள்ள சூழல் மாசு மிக அதிகமாக இருப்பதையும் பார்க்கிறோம். அதன் காரணமாக நம் கூந்தல் நிச்சயம் பாதிக்கப்படும்.

சூழல் மாசு ஏற்படுத்தும் பாதிப்பிலிருந்து நம் கூந்தலைப் பாதுகாத்துக்கொள்ள தினசரி தலைக்குக் குளிப்பது என்பது இன்றைக்கு அவசியமாகிறது. சரி... தினமும் தலைக்குக் குளிக்க வேண்டும் என்றால் தினமும் ஷாம்பூ உபயோகிக்கலாமா என்ற கேள்வி எழலாம். அது உங்கள் கூந்தலின் தன்மையைப் பொறுத்தது.

சிலருக்கு மண்டைப்பகுதி அதீதமாக வறண்டு காணப்படும். அதாவது முடியெல்லாம் உடைந்து உதிர்கிற அளவுக்கு வறண்டிருக்கும். அப்படிப்பட்டவர்கள் தலைக்கு நல்லெண்ணெயோ, தேங்காய் எண்ணெயோ, விளக்கெண்ணெயோ, ஆலிவ் எண்ணெயோ வைத்து மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்து ஷாம்பூ குளியல் எடுக்கலாம்.

இன்னும் சிலருக்கு மண்டைப்பகுதி எண்ணெய்ப்பசையுடன் இருக்கும். அவர்களுக்கு எண்ணெய் வைத்துக் குளிக்க வேண்டிய தேவை இருக்காது. அவர்களுடைய சருமம் செபேஷியஸ் சுரப்பிகளின் வழியே சீபம் என்ற எண்ணெயைச் சுரந்துகொண்டே இருக்கும். அதனால் அவர்களது தலையில் பிசுபிசுப்பு இருந்துகொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் தினமும் ஷாம்பூ உபயோகிக்க வேண்டாம். வாரத்துக்கு மூன்று நாள்கள் ஷாம்பூ குளியல் எடுத்தால் போதுமானது.

தலையில் எண்ணெய்ப்பசை அதிகமுள்ளோருக்கு சூழல் மாசு காரணமாக அழுக்கு சேரும். அதன் விளைவாக பொடுகு உள்ளிட்ட பிரச்னைகள் வரலாம்.

தலைக்கு குளியல்

சரி... அப்படியானால் எந்த ஷாம்பூ உபயோகிக்க வேண்டும் என்ற கேள்வி அடுத்து வரலாம். இன்று மார்க்கெட்டில் எக்கக்சக்கமான ஷாம்பூக்கள் கிடைக்கின்றன. சுருட்டை முடிக்கேற்ப, நீளமான முடிக்கேற்ப, வறண்ட முடிக்கேற்ப என ஒவ்வொருவரின் முடியின் தன்மைக்கேற்ப அவை கிடைக்கின்றன. எனவே உங்களுடைய கூந்தலின் தன்மை என்னவென தெரிந்துகொண்டு அதற்கேற்ற ஷாம்பூவை தேர்ந்தெடுக்கலாம்.

எப்போதுமே ஷாம்பூவில் பாரபினும் எஸ்.எல்.எஸ்ஸும் (Sodium lauryl sulfate -SLS) அதிகமில்லாதபடி தேர்ந்தெடுப்பது சிறந்தது. உங்களால் உங்கள் முடியின் தன்மையைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் அருகிலுள்ள அழகுக்கலை நிபுணரையோ, கூந்தல் சிகிச்சை நிபுணரையோ அணுகித் தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்