Header Ads Widget

``இந்தியா, மன்மோகன் சிங்-க்கு கடன்பட்டிருக்கிறது” - புகழ்ந்து தள்ளிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எப்போதும் தனது மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசுபவர். மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சரான நிதின் கட்கரி நாடு முழுவதும் நெடுஞ்சாலைகள் அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். டெல்லியில் இருந்து மும்பைக்கு 12 மணி நேரத்தில் கார்களில் செல்லும் வகையில் புதிய சாலை அமைக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் நிதின் கட்கரி கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் பேசிய கட்கரி, ``இந்தியாவில் ஏழைகளுக்கு பயனளிக்கக்கூடிய தாராள பொருளாதார கொள்கை தேவை.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாட்டில் நிதியமைச்சராக இருந்த போது 1991-ம் ஆண்டு பொருளாதார சீர்திருத்ததை தொடங்கி வைத்து தாராளமயமாக்கல் கொள்கையை கொண்டு வந்தது இந்தியாவுக்கு புதிய பாதையை காட்டினார். தாராளமயாக்கல் பொருளாதார கொள்கையை கொண்டு வந்து இந்தியாவின் புதிய பாதைக்கு வழி வகுத்த மன்மோகன் சிங்கிற்கு இந்தியா கடன் பட்டு இருக்கிறது. மன்மோகன் சிங் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தம் காரணமாகத்தான் நான் 1990களின் மத்தியில் மகாராஷ்டிராவில் அமைச்சராக இருந்த போது சாலை அமைக்க என்னால் நிதி திரட்ட முடிந்தது.

ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு பொருளாதார கொள்கை மிகவும் மகத்தானது. தாராளமயமாக்கல் கொள்கை ஒரு நாட்டை எப்படி மேம்படுத்தும் என்பதற்கு சீனா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். பொருளாதார கொள்கையை விரைவுபடுத்த நாட்டிற்கு அதிக அளவில் முதலீடு தேவை. சாலை கட்டுமானப்பணிகளுக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை சாமானிய மக்களிடமிருந்தும் நிதி திரட்டுகிறது. தனது அமைச்சகம் நாடு முழுவதும் 26 பசுமை நெடுஞ்சாலைகளை அமைத்து வருகிறது. எனது துறையில் நிதிப்பற்றாக்குறை கிடையாது. தற்போது சாலை நுழைவு வரியாக ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி கிடைக்கிறது. இது 2024ம் ஆண்டிலிருந்து 1.40 லட்சம் கோடியாக அதிகரிக்கும்” என்று தெரிவித்தார். மன்மோகன் சிங்கை நிதின் கட்கரி புகழ்ந்து பேசி இருப்பது பாஜகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்