தி.மு.க-வின் சீனியர் அமைச்சருக்கு லண்டன் மற்றும் அரபு நாடுகளில் சிலபல தொழில்களைச் செய்துவருகிறார். இவற்றையெல்லாம் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் அவரின் வாரிசுதான் கவனித்துக்கொள்கிறாராம். மாதம் ஒரு முறை வெளிநாட்டுக்குச் சென்று, பிசினஸை கவனித்துக்கொள்ளும் வாரிசுக்கு, ‘முதல்ல பிஸினஸ்... எம்.பி பதவியெல்லாம் பெயருக்குத்தான்’ என்கிறார்கள் உடன்பிறப்புகள். இந்த முறை அவர் வட இந்திய கனிம வளத் தொழிலதிபர்களுடன் பிசினஸ் டீலிங் பேசுவதற்காக லண்டனுக்குச் சென்றிருக்கிறாராம். உள்நாட்டில் ‘டீல்’ பேசினால் தகவல்கள் வெளியில் கசிந்துவிடும் என்பதால், இரு தரப்புப் பெரும்புள்ளிகளும் லண்டனுக்குப் பறந்திருக்கிறார்கள். வாரிசோடு, தமிழ்நாட்டின் சர்ச்சைக்குரிய கனிம அதிபரான புதுக்கோட்டைக்காரரும் சென்றிருக்கிறார். அந்த டீலிங் வெற்றிகரமாக முடிந்திருப்பதால், உற்சாகமாக இருக்கிறாராம் வாரிசு!
அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளராக இருக்கிறார், நெல்லை மாவட்டத்தின் மூத்த அரசியல்வாதியான கருப்பசாமி பாண்டியன். ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினராக இருந்தபோதிலும், எடப்பாடி பழனிசாமி அணியில் தீவிரமாகச் செயல்படுபவர் அவர். அண்மையில் நெருங்கிய உறவினரின் துக்க வீட்டில் ஓ.பன்னீர்செல்வத்தை நேருக்கு நேர் பார்த்தும் ஒரு வார்த்தைகூட பேசவில்லையாம் கருப்பசாமி பாண்டியன்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2019-12/756e2664-606e-4170-9816-d360a54643a5/VKP_2.jpg)
அந்த அளவுக்கு எடப்பாடி பழனிசாமி அணியில் தீவிரமாக இருப்பவர். ஆனால், அவரின் மகன் வி.கே.பி.சங்கர், திடீரென ஓ.பி.எஸ் அணிக்கு மாறிவிட்டார். “மாவட்டச் செயலாளர் பொறுப்பு கொடுக்கிறோம்” என்ற உத்தரவாதத்தோடு அவரைத் தூக்கியிருக்கிறது ஓ.பி.எஸ் தரப்பு. “மகன் கோஷ்டி மாறியதால், தனக்கு எடப்பாடி பழனிசாமி அணியில் முக்கியத்துவம் குறைந்துவிடுமோ” என்கிற கவலையில் இருக்கிறாராம் கானா என்கிற கருப்பசாமி பாண்டியன்.
டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த கதர் கட்சி எம்.எல்.ஏ., தன்னுடைய நிலப் பத்திரத்தை அடமானம்வைத்து வங்கி ஒன்றில் சில கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். பிரதி மாதம் கடன் தவணையைத் திருப்பிச் செலுத்தாததால், வங்கி அதிகாரிகள் பத்திரத்திலுள்ள இடத்தை ஆய்வு செய்திருக்கிறார்கள். அப்போது அந்த இடமே வேறு ஒருவருக்குச் சொந்தமாக இருப்பதைக் கண்டு அதிர்ந்துபோயிருக்கிறார்கள். இது பற்றி விளக்கம் கேட்க எம்.எல்.ஏ வீட்டுக்குச் சென்றபோது, அதிகாரத் தோரணையில், பேச மறுத்து திருப்பி அனுப்பிவிட்டாராம் அவர். வேறு வழியின்றி சட்ட நடவடிக்கை எடுக்கும் முடிவுக்கு வங்கி அதிகாரிகள் வந்திருக்கிறார்களாம்.
திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆன்மிக அமைச்சர், கடைசிவரை வெள்ளி வேலைச் சுமந்துவந்த சிவாச்சார்யாரின் அருகிலேயே இருந்தார். சூரனின் ஒவ்வொரு தலையும் சம்ஹாரம் செய்யப்பட்டதும், வேலைச் சுமந்து வந்த சிவாச்சார்யாரின் அருகில் சென்று கைகளைக் கூப்பி, குடும்பப் பிரச்னையையும், அரசியல் எதிர்காலம் பற்றியும் சொல்லிப் பலன் கேட்டாராம் அமைச்சர். சந்தோஷ மண்டபத்தின் அருகில்வைத்து, “உனக்கு இனி எல்லாமே ஏறுமுகம்தான்.
எந்தக் கவலையும் வேண்டாம்” என அருள்வாக்குச் சொல்லி, கையில் ஒரு எலுமிச்சைப்பழத்தையும் கொடுத்திருக்கிறார் அந்த சிவாச்சார்யார். வாடிய முகத்துடன் நின்றுகொண்டிருந்த அமைச்சரின் முகத்தில் அதன் பிறகு மகிழ்ச்சி மின்னியது என்கிறார்கள் உடனிருந்தவர்கள்.
சமீபத்தில் மாங்கனி மாவட்டத்தில் நடந்த முன்னாள் எம்.எல்.ஏ வீட்டுத் திருமண நிகழ்வில் சின்ன தலைவர் கலந்துகொண்டார். அதேநாளில் தன் கட்சியிலிருந்து 50-க்கும் மேற்பட்டோர், சேலத்துக்காரர் தலைமையில் இலைக் கட்சியில் ஐக்கியமான செய்தியைக் கேட்டு கொதித்துவிட்டாராம் சின்ன தலைவர். அந்த மாவட்டத்தின் எம்.எல்.ஏ-க்கள் இருவரையும் அழைத்து, ‘என்னது இது... கொஞ்சம் கொஞ்சமாக எல்லாரும் கட்சி தாவிக்கிட்டு இருக்காங்க... என்ன பண்றீங்க நீங்களாம்?’ என்று வறுத்தெடுத்துவிட்டாராம் அவர். எம்.எல்.ஏ-க்கள் முகத்தில் ‘அருளே’ இல்லையாம்.
திண்டுக்கல் மாவட்ட தி.மு.க மூத்த அமைச்சர் மட்டுமல்லாமல், அ.தி.மு.க ஆட்சியிலும் முக்கிய அமைச்சர்களுக்கு பினாமியாக இருந்து சர்ச்சைகளில் சிக்கியவர் சட்டக் கல்லூரி ஒன்றைத் திறந்திருக்கிறார். மணல் மாஃபியா சேகர் ரெட்டியின் கூட்டாளியான இவர், பண மதிப்பிழப்பின்போது பல கோடி ரூபாயை மாற்றியதில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டவர். இவர் திண்டுக்கல்லில் புதிதாகக் கட்டியிருக்கும் சட்டக் கல்லூரி திறப்புவிழாவுக்கு மூன்று அமைச்சர்கள், எம்.பி., கலெக்டர், எஸ்.பி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றிருப்பதுதான் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் ஹாட் டாபிக். “மாவட்டத்துக்கு ஒரு சட்டக் கல்லூரியைக் கொண்டுவரத் திறனில்லாமல், தனியார் சட்டக் கல்லூரியைத் திறந்துவைப்பதற்கு அரசு விழாபோல இவ்வளவு பில்டப் தேவையா... பணம் மட்டும் இருந்தா போதும்... அதிகாரத்துல இருக்கிறவங்களை வளைச்சுப்புடலாம்போல” என முணுமுணுக்கிறார்கள் திண்டுக்கல் மாவட்ட மக்கள்!
from Latest News
0 கருத்துகள்