விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ஜ.க சிறுபான்மையினர் அணியின் ஆய்வுக்கூட்டம் நேற்று முன்தினம் (25-ம் தேதி) திண்டிவனத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அந்த அணியின் தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``தி.மு.க உட்பட எதிர்க்கட்சிகள், பா.ஜ.க-மீது வைப்பது இரண்டே இரண்டு குற்றச்சாட்டுகளைத்தான். ஒன்று... பா.ஜ.க வட மாநில கட்சி, இந்திக்கு ஆதரவளிக்கும் கட்சி, தமிழர் விரோத கட்சி என்ற இனவாத மொழிவாத விஷயங்களை இங்கிருக்கக் கூடிய 'திராவிட மாடல்' எனும் திருட்டு மாடலை நடத்தக்கூடிய தி.மு.க உட்பட்ட அதன் கூட்டணி கட்சிகள் பா.ஜ.க-வை எதிர்ப்பதற்கு பிரயோகிக்கும் குற்றச்சாட்டுகள்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-11/8af12aae-9fcf-490f-98a2-262d0fda4a0f/IMG_20221127_010043.jpg)
இரண்டாவது, பா.ஜ.க இந்துத்துவா சித்தாந்த கட்சி, இஸ்லாமிய கிறிஸ்தவர்களை எதிர்க்கக்கூடிய கட்சி, இந்த மக்களின் உரிமைகளை பறிக்கக்கூடிய கட்சி, இந்தக் கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டால் சிறுபான்மையினர் நாடு கடத்தப்படுவார்கள் போன்ற அச்சத்தை விதைக்கிறார்கள். முதல் குற்றச்சாட்டுக்கு எதிராக பா.ஜ.க நிர்வாகிகள், மாநில தலைவர் உட்பட அனைவரும் கடுமையாக உழைத்து பிரசாரம் செய்து கொண்டுள்ளனர். இன்னொரு கடினமான குற்றச்சாட்டை பா.ஜ.க-வின் சிறுபான்மையினர் அணி மட்டும்தான் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதனால், தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி அமைப்பதற்கு சிறுபான்மையினர் பங்கு மகத்தானதாக இருக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள், கூடிய விரைவில் 'பொது சிவில் சட்டம்' அமல்படுத்தப்படும் என சொல்லியிருக்கிறார். இதற்கு எதிராக மதவாத, அடிப்படைவாத சக்திகள் குரல் கொடுக்கிறார்கள். பா.ஜ.க-வை பொறுத்தவரை, நாங்கள் தேர்தல் வாக்குறுதியாக தந்தவற்றை நிச்சயமாக நிறைவேற்றுவோம். ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே சட்டம் எனும் அடிப்படையில், இந்த தேசத்தில் உள்ள எல்லோருக்கும் ஒரே நீதி வழங்கப்பட வேண்டும் என்றால், சட்டங்கள் பல்வேறு வகையாக பிரிக்கப்படக்கூடாது என்ற அடிப்படையில்தான், பொது சிவில் சட்டத்தை பா.ஜ.க கொண்டு வருகிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-09/003d3cd0-18ab-4e80-8b96-e2b4dfdf315e/6311a4ac993e3.jpg)
இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் யாராக இருப்பினும், அவர்களுடன் நாங்கள் விரிவாக கலந்துரையாட தயாராக இருக்கிறோம். தேசம் மிகச்சிறந்த வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது, இங்குள்ள தி.மு.க அமைச்சர்கள்... கூமுட்டைகளாக மக்களை ஏமாற்றக்கூடிய மடையர்களாக இருக்கிறார்கள். இவர்களை வழிநடத்தக்கூடிய ஸ்டாலின் அவர்களே, 'கலகத்தலைவன் படம் நல்லா இருக்கா!' என்று அமைச்சர் சுப்பிரமணியனிடம் விசாரிப்பதை பார்க்கிறோம். விளையாட்டில் முன்னிலைப்படுத்தக் கூடிய மாணவி ஒருவர், தவறான மருத்துவச் சிகிச்சையால் உயிரிழந்தார், இதைப்பற்றி ஸ்டாலின் கவலைப்படவில்லை.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்காக கவலைப்படவில்லை. பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தராமல் இருப்பது, மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு போன்றவற்றை பற்றி அவர் கவலைப்படவில்லை. அவர், அவருடைய பிள்ளை நடிக்கும் கலகத்தலைவன் படம் நல்லா இருக்கா என்று கவலைப்படுகிறார் என்றால், இவரை போன்ற முதல்வர்... தமிழகத்திற்கு கேடு, அசிங்கம், அவமானம். ஆக, கூமுட்டைகளும், ஊழல் பெருச்சாளிகளும் தமிழகத்தை ஆளுகிறார்கள்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2021-07/9aeb2c99-d4a4-4f90-8c5d-379dafd4630f/F_D_13.jpg)
இந்த ஊழல் பெருச்சாளிகளை பா.ஜ.க முற்றிலுமாக தூக்கி எறிந்து விட்டு... ஊழலற்ற, உண்மையான, தேசிய சிந்தனை கொண்ட, வளர்ச்சிமிக்க ஆட்சியை வருகின்ற 2024-ல் நாடாளுமன்றத்தில் கொண்டு வருவோம். அப்போது சட்டமன்றத் தேர்தலும் சேர்ந்து நடந்து, நிச்சயமாக தமிழகத்திலும் தாமரை மலரும். இதனை ஸ்டாலின் உட்பட கூமுட்டை அமைச்சர்களுக்கும் சொல்லிக் கொள்கிறோம்" என்றார் காட்டமாக.
from Latest News
0 கருத்துகள்