Header Ads Widget

மங்களூரு: வெடிகுண்டுகளுக்கான பொருள்கள்; சர்வதேச பயங்கரவாதிகளுடன் தொடர்பு?! - அதிர்ச்சித் தகவல்கள்

கோவை கார் சிலிண்டர் வெடிவிபத்து நாட்டையே அதிரச்செய்த நிலையில், கர்நாடக மாநிலம், மங்களூரில் குக்கர் வெடிகுண்டு வெடித்து, ஆட்டோ சிதறிய சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.  “இது சாதாரண விபத்து அல்ல, தீவிரவாதத் தாக்குதலுக்கான முன்னெடுப்பு” என கர்நாடக காவல்துறை தலைவர் (இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் போலீஸ்) பிரவீன் சூட் தெரிவித்திருந்தார்.

குற்றவாளி முகமது ஷாரிக்.

ஆட்டோவில் வெடி குண்டு வெடித்த சம்பவத்துக்கு மூளையாக இருந்த முகமது ஷாரிக், போலீஸாரின் கண்காணிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு உதவிய மற்றும் தொடர்பில் இருந்ததாக, ஊட்டியில் ஒருவர், கர்நாடக மாநிலம் மைசூரில் இருவர், மங்களூரில் ஒருவர் என நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெடிகுண்டு தயாரிப்புக்கான மூலப்பொருட்கள்.

வெடி பொருள்கள் பறிமுதல்!

என்.ஐ.ஏ வசம் வழக்கை ஒப்படைக்க திட்டமிட்டுள்ள கர்நாடக போலீஸார், என்.ஐ.ஏ அதிகாரிகளுடன் இணைந்து, நேற்று(21–ம் தேதி) காலை முதல் இரவு வரையில், மங்களூரு, மைசூர் பகுதியில் ஏழு இடங்களில் சோதனை செய்தனர். முக்கிய குற்றவாளி முகமது ஷாரிக் வீட்டில் சோதனை செய்து, பேட்டரிகள், சல்பர், பாஸ்பரஸ், ‘சர்கியூட்’, ஆணி மற்றும் ‘போல்ட் நட்’ உள்பட வெடிகுண்டு (டைம் பாம் அல்லது ரிசேமாட் பாம்) தயாரிக்க பயன்படுத்தும் பலவகை பொருள்களை பறிமுதல் செய்தனர்.

முகமது ஷாரிக் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு, அவரின் குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்களை அழைத்து வந்து, முகமது ஷாரிக் அடையாத்தை உறுதி செய்துள்ளனர். அவருக்கு உதவியதாக கருதப்படும் நபர்கள் தங்கியுள்ள வீடுகள், அலுவலகம் என, தமிழகம், கேரளா என பல பகுதிகளில் தீவிர சோதனைகள் நடக்கிறது.

வெடிகுண்டு தயாரிப்புக்கான மூலப்பொருட்கள்.

சர்வதேச பயங்கரவாதிகளுடன் தொடர்பு!

நேற்று மதியம் செய்தியாளர்களை சந்தித்த, சட்ட ஒழுங்குக்கான ஏ.டி.ஜி.பி அலோக் குமார், ‘‘இச்சம்பவம் தொடர்பாக இதுவரை, முகமது ஷாரிக்குக்கு உதவிய, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முகமது ஷாரிக் ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் சர்வதேச அளவிலான சில பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அவரை இயக்கியது அரஹ்பத் அலி என கண்டறியப்பட்டுள்ளது. தற்போது, அவர் துபாயில் தலைமறைவாக உள்ளார். ஐந்து தனிப்படைகள் அமைத்து கர்நாடகா முழுவதிலும் சோதனை நடத்தப்படுகிறது; சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரித்து வருகிறோம். கோவை குண்டு வெடிப்பு வழக்குக்கும் இவருக்குமான தொடர்பு குறித்து விசாரிக்கிறோம்,’’ என்றார்.

முகமது ஷாரிக்.

2020ல் ஏற்கனவே வழக்கு!

முகமது ஷாரிக் ஏற்கனவே, 2020 நவம்பர் மாதம், ‘லஷ்கர் இ தொய்பா’ மற்றும் சில பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக, சுவற்றில் எழுதியதற்காக, கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவர். அப்போதிருந்தே, அவரின் நடவடிக்கைகளை கண்காணிப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கடந்த இரண்டு மாதங்களாகவே போலீஸாரின் பார்வையில் இருந்து தப்பித்து, நவம்பர் துவக்கத்தில் தமிழகம், கேரளா பகுதிகளில் தங்கியுள்ளார். பிரேம்ஜி என்பவரது பெயரிலான திருடப்பட்ட ஆதார் அட்டையை பயன்படுத்தி, மைசூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, வீட்டில் வெடிகுண்டு தயாரித்துள்ளார்.

குக்கர் வெடிகுண்டு

இது சோதனைக்கான வெடிகுண்டு?

இது குறித்து கர்நாடக போலீஸாரிடம் நாம் பேசியபோது, ‘‘பயங்கரவாத அமைப்புகளின் மூளைச்சலவையால் கவர்ந்து இழுக்கப்பட்ட முகமது ஷாரிக், அவர்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சியின் படி, குக்கர் ‘டைமர்’ வெடிகுண்டு தயாரித்துள்ளார். அதை பையில் வைத்துக்கொண்டு ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக, ஆட்டோ குலுங்கியதில் அதீத அதிர்வின் காரணமாகத்தான் வெடிகுண்டு வெடித்துள்ளதாக, அதை சோதித்த வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரின் வீட்டில் வெடிகுண்டுகள் தயாரிக்கும் பல பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், தற்போது வெடித்த இந்த வெடிகுண்டை சோதனை முயற்சிக்காக குறைந்த ‘பவருடன்’ தயாரித்து, அதை சோதனை செய்ய எடுத்துச்சென்றாரா என்ற சந்தேகத்திலும் விசாரிக்கிறோம். டிசம்பரில் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வருவதால், அப்போது பெரிய அளவில் வெடி விபத்தை ஏற்படுத்தவும், அதற்கான வெடிகுண்டை தயாரிக்கவும், இந்த குண்டை சோதனை முயற்சியாக தயாரித்திருக்க அதிக வாய்ப்புள்ளது. சல்பர், பாஸ்பரஸ் என, வெடிகுண்டுக்கான பொருள்களை யாரிடம், எந்தெந்த கடைகளில் வாங்கினார் எனவும், விசாரிக்கிறோம்,’’ என முடித்துக்கொண்டனர்.

கோவை மற்றும் மங்களூர் ஆகிய இரண்டு சம்பவங்களிலும், குற்றவாளிகள் ஏற்கனவே போலீஸாரால் கண்காணக்கப்படும் நபர்களாக இருந்துள்ளனர். ஆனாலும், சர்வ சாதாரணமாக வீடு வாடகைக்கு பிடித்து, பல வெடி பொருள்களை அவர்கள் விலைக்கு வாங்கி வீட்டிலேயே வெடிகுண்டு தயாரித்துள்ளது  பேரதிர்ச்சியாக உள்ளது.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்