கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மார்ட்டின் ராஜா (48). இவர் ஓசூர் நகரில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முந்தினம் காலை, வழக்கம் போல ஓட்டலுக்கு சென்று விட்ட நேரத்தில், அவரின் மனைவி பாஸ்கல் ஜோஷ்வினா, மாமியார் லூர்து மேரி மற்றும் மாமனார் ஆகியோர் வீட்டில் இருந்தனர்.
அப்போது, சுமார் 25 வயது மதிக்கத்தக்க, 3 இளைஞர்கள் வீட்டுக்குள் புகுந்து, பாஸ்கல் ஜோஷ்வினா மற்றும் லூர்து மேரி ஆகியோரை கத்தி முனையில் மிரட்டி, அவர்கள் அணிந்திருந்த தலா, 4 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். மேலும், பீரோ சாவியை பெற்ற அவர்கள், பீரோவை திறந்து அதிலிருந்த, 8 பவுன் தங்க நகைகளையும் கொள்ளையடித்தனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2020-01/e50e497d-7d8d-422f-8c9e-4f9a4eb27060/cctv_camera_photo.jpg)
அந்த நேரத்தில், மார்ட்டின் ராஜா உணவு சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்துள்ளார். அவரை கண்ட திருடர்கள், இருக்கம்பியால் அவரை தாக்கிவிட்டு தப்பியோடினர். இதில், தலையில் படுகாயமடைந்த மார்ட்டின் ராஜா, சிகிச்சை பெற்றுவிட்டு இன்று மாலை, ஒசூர் அட்கோ போலீஸாரிடம் புகார் கொடுத்தார். சிசிடிவி காட்சிகள் மற்றும் கைரேகைகளை வைத்து, கொள்ளையடித்த வாலிபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி நகர் மற்றும் ஒசூர் பகுதியில் கடந்த, இரண்டு வாரங்களாக தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால், மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
from Latest News
0 கருத்துகள்