கரூர் அருகே தொழிற்பேட்டை பகுதியில் சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக பொதுமக்கள் மூலமாக குழந்தைகள் நல அலுவலகத்திற்கு புகார் சென்றுள்ளது. இந்த புகார் குறித்து, குழந்தைகள் நல அலுவலர் கனகவல்லி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் அளித்தார். அந்த தகவலின் அடிப்படையில், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பெயரில், தனிப்படை குழு அமைக்கப்பட்டு சம்பவ இடத்தில் ரகசிய விசாரணையை மேற்கொண்டனர்.
இதில், மூன்று பெண் புரோக்கர்கள், ஐந்து இளைஞர்கள் உட்பட எட்டு பேரை கரூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, போலீஸார் விசாரணையை தொடங்கினர். மேலும், கரூர் காவல் நிலையத்திற்கு வந்த எஸ்.பி சுந்தரவதனம் விசாரணையை தீவிரப்படுத்த உத்தரவிட்டு சென்றார். அதனை தொடர்ந்து, இந்த வழக்கில் சாந்தி (42), மேகலா (42), மாயா (45) ஆகிய மூன்று பெண் புரோக்கர்கள், கார்த்தி (28), கார்த்திகேயன்(27), சந்தோஷ் (30), தன்னாசி என்ற சமுத்திரபாண்டி (27), கௌதம் (30) உள்ளிட்ட 8 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு, சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்த குற்றத்திற்காக போக்சோ வழக்கில் அவர்களை கைது செய்தனர்.
8 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களை நீதிமன்ற காவலுக்கு அழைத்துச் சென்றனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் மோகன் என்பவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், போக்சோ வழக்கில் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்துவந்த வழக்கில் ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் உள்பட 9 பேர்கள் கைது செய்யப்பட்டிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
from Latest News

0 கருத்துகள்