கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சி பகுதியில் உள்ள காவிரி ஆற்றிலிருந்து, தொடர்ந்து மணல் கடத்தலில் சிலர் ஈடுபடுவதாக அங்குள்ள பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து வந்தனர். எனினும், நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில், ஜல்லி சிமென்ட் கலவை இயந்திரம் பொருத்தப்பட்ட லாரியில் தினமும் மணல் திருடிக் கொண்டு செல்லப்படுகிறது என கூறி, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த பகுதி வழியாக வந்த அந்த லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அதோடு, பொதுப்பணித்துறை அதிகாரிகளை வரவழைத்து போலீஸார் விசாரணையை தொடர்ந்தனர். தொடர்ந்து, போலீஸார் மக்கள் சிறைப்பிடித்த அந்த ஜல்லி சிமென்ட் கலவை கொண்டு செல்லும் லாரி மீது ஏறி பார்த்தபோது, கலவை இயந்திரத்தின் உள்ளே நிறைய மணல் இருப்பது தெரியவந்தது.
இந்த மணல் புகழூர் பகுதியில் காவிரி ஆற்றில் கதவணை கட்டும் பணிகளுக்காக கொண்டு செல்லப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர். அப்போது, 'திருட்டுத்தனமாக ஏன் சிமென்ட் ஜல்லி கலவை கொண்டு செல்லும் லாரியில் மணலை கொண்டு செல்கிறீர்கள், மணல் ஏற்றி செல்லும் லாரியில் கொண்டு போக வேண்டியதுதானே?. இப்படி, மணலை திருடினால், அது நியாயம் ஆகிவிடுமா?. இப்படி, தொடர்ந்து மணல் திருட்டு நடக்கிறது. அதனால், கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பொதுமக்கள் கூறியதோடு, பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதோடு, இந்த லாரியில் தொடர்ந்து மணல் கடத்தப்பட்டு வருவதாகவும், இந்த மணல் கரூர் பகுதிக்கு கொண்டு செல்வதாகவும், லாரி டிரைவர் மீது நடவடிக்கை எடுத்து லாரியை பறிமுதல் செய்ய வேண்டும் என்று போலீஸாரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, லாரி டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். காவல்துறையினர் கொடுத்த உத்தரவாதத்தை தொடர்ந்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர், லாரியுடன், லாரி டிரைவரை விசாரணைக்காக போலீஸார் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
from Latest News

0 கருத்துகள்