முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 34 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவை கடந்த ஆண்டு மே மாதம் பதவியேற்றுக்கொண்டது. இந்தநிலையில், 19 மாதங்கள் கழித்து தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதிக்கு அமைச்சரவையில் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. உதயநிதிக்கு என்ன மாதிரியான துறை ஒதுக்கப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், "இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, வறுமை ஓழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள்" ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை:
முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியும் நடத்தப்பட்டது. இதனால், உதயநிதிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியிருக்கிறது. அமைச்சராக உதயநிதி இத்துறைகளில் எதிர்கொள்ளப்போகும் சவால்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
விளையாட்டுத்துறையைப் பொறுத்தவரை, 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான உடற்கல்வி பாடமும், ஆசிரியர் நியமனமும் இல்லை. தற்போதைய நிலையில் சுமார் 4 ஆயிரம் மேல்நிலைப் பள்ளிகளில் விளையாட்டு பயிற்சி அளிக்க 750 உடற்கல்வி ஆசிரியர்கள் தான் உள்ளார்கள். 100 மாணவருக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்பது ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையாக இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் பயிலும் 65 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா உடற்கல்வி தொடர்பான புத்தகங்களும், விளையாட்டு உபகரணங்கள், சீருடைகள் வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் தரப்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
இதுகுறித்து தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க மாநிலச் செயலாளர் ராஜா சுரேஷ் கூறுகையில்,
"உடற்கல்வி ஆசிரியர்கள் ஓய்வு பெற்ற பின்னர் அவர்களின் இடத்திற்கு புதிய ஆட்களை நியமித்திருக்க வேண்டும். ஆனால், இதுவரையில் நியமிக்கப்படவில்லை. தற்போதுள்ள சூழலில் 250 மாணவர்களுக்கு 1 உடற்கல்வி ஆசிரியரே இருக்கிறார். மத்திய அரசு 65 வகையான விளையாட்டுப் போட்டிகளை அங்கீகரித்து அதற்கு நிதியுதவி வழங்குகிறது. மாநில அரசைப் பொறுத்தவரை 54 வகையான விளையாட்டு போட்டிகளுக்கு அங்கிகாரம் அளித்திருக்கிறது. பள்ளிகளை பொறுத்தவரை பாக்ஸிங், கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால், செஸ், கேரம்போர்டு உள்ளிட்ட 24 விளையாட்டுப் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பயிற்சி அளிக்கப்படுகிறது. மற்ற விளையாட்டுப் போட்டிகளை கண்டுகொள்வதில்லை. அதற்கான பயிற்சிகளும் இல்லை. பள்ளிகளுக்கு விலையில்லாத சீருடை, உபகரணங்கள் கொடுக்கப்படுகிறது. ஆனால், உடற்கல்விக்கு விலையில்லா உபகரணங்கள் மற்றும் சீருடைகளைக் கொடுப்பதில்லை. இதற்கான நிதியையும் முழுமையாக நிறுத்திவிட்டார்கள்.
இதுமட்டுமல்ல, உடற்கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதிகள் சரிவரக் கிடைப்பதில்லை. மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளுக்கான நிதியை சண்டைபோட்டுத் தான் வாங்க வேண்டிய நிலை இருக்கிறது. தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்குகொள்ளும் அளவில் விளையாட்டு திடல்களின் அமைப்புகளை மாற்ற வேண்டும். குறிப்பாக, கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள் உடல் அளவில் மேம்பட்டவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட மாணவர்கள் பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்களாக உள்ளார்கள். அவர்களின் தேவையை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். தேவையான பொருளாதார உதவி மற்றும் உபகரணங்களை வழங்கி பயிற்சி அளித்தால் உலக அரங்கிலும் நாம் தங்கப் பதக்கங்களைக் குவிக்கலாம்.
இதேபோல, பாரம்பரிய விளையாட்டுகள் மீது கவனம் செலுத்துவதில்லை. இதில் தீவிர கவனம் செலுத்தி வெளி மாநிலங்களுக்கு விளையாட்டுப் போட்டிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு உத்தரவாதம் அளித்து தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்" என்றார்.
இதுபோக, மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய விளையாட்டு மேம்பாட்டு நிதியும் கடந்த 3 வருடங்களில் குறைந்திருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மத்திய அரசு, மாநிலங்களுக்கு விளையாட்டு மேம்பாட்டிற்கு ஒதுக்கியது ரூ.809.5 கோடி. இதில், அதிகபட்சமாகக் குஜராத்துக்கு மட்டும் ரூ.285 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக, உத்தர பிரதேசத்துக்கு ரூ.46.55 கோடியும், பஞ்சாப்புக்கு ரூ.45.33 கோடியும், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவுக்கு ரூ.41 கோடியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழகத்திற்கு ரூ.4.32 கோடி மட்டுமே மேம்பாட்டு நிதியாக ஒதுக்கியுள்ளது. உத்திரகண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், புதுச்சேரி மாநிலங்கள் மிகக்குறைவான நிதி ஒதுக்கப்பட்ட இடங்களில் இருக்கிறது. மத்திய அரசின் இந்த நிதி ஒதுக்கீடு குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ், "இது ஓரவஞ்சனை. இது தான் பாஜக -வின் சமநீதி" என்று கடுமையாகச் சாடியிருக்கிறார்.
வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள்:
இதுபோக வறுமை ஒழிப்புத் துறையிலும் உதயநிதி அதீத கவனம் செலுத்த நேரிடும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கணக்கின் படி, நிதி ஆயோக் மற்றும் கொள்கை வளர்ச்சி திட்டக் குழுவின் நிலையான வளர்ச்சி இலக்குகளைச் செயல்படுத்தியதன் மூலம் வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு முதல் இலக்கை எட்டியிருக்கிறது. இதில் தமிழ்நாடு 86 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில், இந்திய அளவில் கேரளா முதலிடத்தையும், தமிழ்நாடு இரண்டாவது இடத்தையும் பிடித்திருந்தது. இதனால், தமிழ்நாடு முதல் நிலையிலேயே நீட்டிக்கத் தீவிர கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை:
மேலும், சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையானது வேளாண்மை, கல்வி, நீர், சுகாதாரம், ஊரக வளர்ச்சி, தொழில்கள் மற்றும் கட்டமைப்பு போன்ற முக்கிய துறைகளின் நீடித்த வளர்ச்சியினை அடைவதற்கு இத்துறைகளுடன் ஒருங்கிணைந்து செயலாற்றும். அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் அமைப்பாக இத்துறை இருக்கிறது. இத்துறையைப் பொறுத்தவரை முதல்வர் ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் இணைந்து செயலாற்ற உள்ளதால் கவனிக்கத்தக்க ஒன்றாகவும் மாறியிருக்கிறது.
from Latest News

0 கருத்துகள்