Header Ads Widget

மாண்டஸ் புயல் எதிரொலி: அதிகரிக்கும் நீர்வரத்து; திறக்கப்படும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள்!

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'மாண்டஸ்' புயலாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்தது. இன்று காலை நிலவரப்படி, சென்னைக்கு 270 தென்கிழக்கே கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி மாண்டஸ் புயலின் வேகம் மணிக்கு 13 கி.மீ ஆகவுள்ளது.

மாண்டஸ் புயல்

புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. தீவிர புயலாக நகரும் மாண்டஸ் புயல், இன்னும் மூன்று மணிநேரத்தில் வலுக்குறைந்த புயலாக மாறும். புயல் காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது, 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

புயல் காரணமாக, சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. மேலும், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை தமிழகத்தில் உள்ள 24 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளிலிருந்து இன்று மதியம் 12 மணியளவில் உபரி நீர் திறந்துவிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி

சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. உதாரணமாக தற்போதைய நிலையில் புழல் ஏரிக்கு வினாடிக்கு 140 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளிலிருந்து 100 கன அடி உபரி நீர் திறந்துவிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்