Header Ads Widget

Doctor Vikatan: மஞ்சள் நிறத்தில் விகாரமாக மாறிய நகங்கள்... நீரிழிவுதான் காரணமா?

Doctor Vikatan: எனக்கு நீரிழிவு பாதிப்பு இருக்கிறது. கடந்த சில வருடங்களாக கால் நகங்கள் நிறம் மாறியும் மிகவும் அழுத்தமாகவும் விகாரமாகவும் காணப்படுகின்றன. அவற்றை வெட்டுவதே மிகுந்த சிரமமாக இருக்கிறது. இதை சர்க்கரை நோயின் தாக்கமாக எடுத்துக்கொள்வதா அல்லது வேறு பாதிப்பின் அறிகுறியாக இருக்குமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் டி. பழனியப்பன்

நீரிழிவு மருத்துவர் டி. பழனியப்பன் | சென்னை

நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரச்னைக்கு 'டயாபட்டிக் நெயில்ஸ்' என்று பெயர். சர்க்கரைநோயாளிகளுக்கு நகங்கள் பாதிக்கப்படுவது சகஜமானது. நகங்களில் பூஞ்சைத் தொற்று ஏற்படும். அதற்கு Onychogryphosis என்று பெயர். அந்த நிலையில் நகங்கள் நிறம் மாறியும் வளைந்தும் வித்தியாசமாகக் காட்சியளிக்கும்.

நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல நகங்கள் மிகவும் அழுத்தமாக, வெட்டவே முடியாத அளவுக்கு மாறியிருக்கும். இது நீரிழிவு நோயாளிகளை பிரத்யேகமாக பாதிக்கிற ஒரு பிரச்னை.

நீரிழிவு பாதித்ததவர்கள் பொதுவாகவே கை, கால் மற்றும் பாதங்களைப் பராமரிப்பதில் அதிக அக்கறை காட்ட வேண்டும். நகங்களை வெட்டுவதில்கூட அதீத கவனத்துடன் இருக்க வேண்டும். நகங்களை முறையாக வெட்ட வேண்டும். நீரிழிவு நோயாளிகளுக்கு நரம்புகள் பாதிக்கப்பட்டிருக்கும். ரத்த ஓட்டம் குறைந்திருக்கும். அதன் காரணமாக நடக்கும்போது அவர்களுக்கு உணர்ச்சி குறைவாக அல்லது இல்லாமல் இருக்கும்.

நீரிழிவு இல்லாத ஒருவர் நகங்களை வெட்டும்போது தவறுதலாக சதையோடு சேர்த்து வெட்டிவிட்டால் அதன் வலியை உணர்வார். அதுவே நீரிழிவு பாதித்தவர்களுக்கு அப்படி சதையோடு சேர்த்து வெட்டினாலும் சில நேரங்களில் வலியே தெரியாமலிருக்கும். நகங்களை முறையாக வெட்டாமல் விட்டால் அது உள்நோக்கி வளரும். அதனால் இன்ஃபெக்ஷன் ஏற்பட்டு பெரிய பாதிப்பு வரை கொண்டு விடலாம்.

Nails (Representational Image)

நீரிழிவு நோயாளிகளுக்கான பாதப் பராமரிப்புக்கென்றே 'போடியாட்ரி' என்றொரு பிரத்யேக பிரிவே இருக்கிறது. அவர்களுக்கு கால்களில் வரும் காயங்கள், காய்ப்புகளுக்கு சிகிச்சை அளிப்பது, நகங்களை ட்ரிம் செய்வது போன்றவற்றை முறையாகச் செய்வது குறித்து அவர்கள் கற்றுத் தருவார்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்