Header Ads Widget

கரூர்: தடபுடல் ஏற்பாடு, கோர்ட் உத்தரவை காரணம் காட்டி தடை! - ஏமாற்றத்தில் `சேவல்கட்டு' போட்டியாளர்கள்

காளைகளை களமிறக்கி நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்கு அலங்காநல்லூர் எவ்வளவு பிரசித்தமோ, அப்படி சேவல்களை வைத்து நடத்தப்படும் `சேவல்கட்டு' போட்டிக்கு, கரூர் மாவட்டத்திலுள்ள பூலாம்வலசு கிராமம் பேர் பெற்றது. பொங்கலையொட்டி இங்கு நடைபெற்றுவந்த சேவல்கட்டு போட்டியில் தமிழ்நாடு முழுவதுமிருந்து சண்டை சேவல் வளர்ப்போர், சேவல்களோடு வந்து போட்டியில் கலந்துகொள்வர். மூன்று நாள்கள் நடைபெறும் இந்தப் போட்டியில், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்துகொள்வார்கள். ஆனால், சில வருடங்களுக்கு முன்பு சேவல் கால்களில் கட்டப்பட்ட கத்தி பட்டு, அங்கு வேடிக்கை பார்த்தவர்களுக்கு காயம் ஏற்பட, அதைத் தொடர்ந்து பூலாம்வலசில் சேவல்கட்டு நடத்த நீதிமன்றம் தடைவிதித்தது. அப்படி, நடப்பு ஆண்டிலும் சேவல்கட்டு போட்டி நடத்த நீதிமன்ற தடை இருப்பதால், காவல்துறை சேவல்கட்டு நடத்த அனுமதி மறுத்தது.

தடுப்பு நடவடிக்கையில் போலீஸார்

ஆனால், இன்னொருபக்கம் விழாக் குழுவினர் மூன்று நாள்களுக்கு போட்டிகளை நடத்த தயாராகி, அனைத்து பகுதிகளுக்கும் அழைப்பிதழ் அனுப்பியிருந்தனர். அதோடு, சேவல்கட்டு நடைபெறும் இடங்கள், ஆடுகளம், வாகனங்களை நிறுத்த இடம் என பல ஏற்பாடுகளைச் செய்தனர். ஆனால், காவல்துறையினர் அனுமதி வழங்கவே இல்லை. இதனால், தமில்நாத்தின் பிற பகுதிகளிலிருந்து சேவல்கட்டு போட்டியில் கலந்துகொள்ள ஏராளமானோர் பூலாம்வலசு பகுதியில் கூடினர். இதையடுத்து, காவல்துறையினர் அந்த இடத்தில் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். கரூர் மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கீதாஞ்சலி தலைமையிலான போலீஸார், சேவல்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ள வந்தவர்களை விரட்டி அடித்தனர். இதனால், பூலாம்வலசில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்துப் பேசிய சேவல்கட்டு போட்டியை ஏற்பாடு செய்தவர்கள், ``தமிழ்நாடு முழுவதும் தமிழர் திருநாள் தைப்பொங்கல் கொண்டாட்டங்கள் விமர்சையாக தொடங்கியிருக்கும் நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு அந்தந்தப் பகுதிகளில் அரசு உரிய அனுமதி அளித்து விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், தமிழர்களின் பாரம்பர்ய விழாவான தைப்பொங்கல் திருநாளில் நாட்டு வகை சேவல்களை அழியாமல் காப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் சேவல்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.

சேவல்கட்டு போட்டியில் கலந்துகொள்ள வந்தவர்கள்

அதன்படி, விழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஊர் பொதுமக்கள் சார்பில் லட்சக்கணக்கில் செலவு செய்து மைதானம் தயார் செய்யப்பட்டிருக்கிறது.

உரிய கட்டுப்பாடுகளுடன் நடத்த மாவட்ட நிர்வாகம், காவல்துறை அனுமதி வழங்கி, 15 மற்றும் 16-ம் தேதிகளில் சேவல்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்