சென்னையில் போதைக்காக உடல் வலி நிவாரண மாத்திரைகளை சிலர் பயன்படுத்தி வருகின்றனர். அதைத் தடுக்க போலீஸார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக டாக்டரின் பரிந்துரையில்லாமல் மருந்தகங்களில் மாத்திரைகளை விற்கக் கூடாது என்று போலீஸார் அறிவுறுத்தியிருக்கின்றனர். ஆனால் அதையும் மீறி சில மருந்தகங்களில் சட்ட விரோதமாக போதைக்காக பயன்படுத்தப்படக்கூடிய உடல் வலி நிவாரண மாத்திரைகள் உள்பட சில மாத்திரைகள் விற்கப்படுகின்றன. அதுகுறித்து கிடைக்கும் தகவலின்படி போலீஸார் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் சென்னை மவுன்ட் பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு புழுதிவாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் அந்த வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் அந்த வீட்டில் உடல் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் ஊசிகள் இருந்தன. இதையடுத்து அந்த வீட்டிலிந்து 523 உடல் வலி நிவாரண மாத்திரைகள் 19 ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக புழுதிவாக்கம் பாலாஜி நகரைச் சேர்ந்த பிரவீன்குமார் (25) சென்னை கண்ணதாசன் நகரைச் சேர்ந்த மகேஷ் (32) ஆகியோரிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் உடல் வலி நிவாரண மாத்திரைககளை மும்பையிலிருந்து வாங்கி சென்னையில் விற்றது தெரியளவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மகேஷ், பிரவின்குமார் ஆகியோர் ஆன்லைன் மூலம் உடல்வலி நிவாரண மாத்திரைகளை வாங்கியிருக்கிறார்கள். பின்னர் அந்த மாத்திரைகளை இரண்டு மடங்கு விலைக்கு போதைக்கு அடிமையான இளைஞர்களிடம் விற்று வந்திருக்கிறார்கள். அதன்மூலம் அதிகளவில் வருமானம் கிடைத்ததால் இவர்கள் இருவரும் தொடர்ந்து உடல்வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி விற்று வந்திருக்கிறார்கள். இந்த மாத்திரைகளை ஊசி மூலமாகவும் ஏற்றுவதற்காக இவர்கள் இருவரும் ஊசிகளையும் வைத்திருந்திருக்கிறார்கள். இவர்கள் இருவருக்குப் பின்னணியில் யார், யார் இருக்கிறார்கள் என விசாரித்துக் கொண்டிருக்கிறோம்" என்றனர்.
இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், ``போதைக்கு அடிமையாகும் இளைஞர்களில் சிலர் உடல் வலி நிவாரண மாத்திரைகள், குழந்தை பேறு சமயத்தில் பயன்படுத்தப்படும் மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும்போது உடலில் உள்ள பாகங்களில் பாதிப்பு ஏற்படும். டாக்டர்களின் பரிந்துரையில்லாமல் யாரும் மாத்திரைகளை உபயோகப்படுத்தக்கூடாது. ஊசி மூலம் இதுபோன்ற மாத்திரைகளை உடலில் ஏற்றிக் கொள்ளும்போது குறுகிய காலத்தில் இளைஞர்கள் உயிரிழக்க நேரிடும். எனவே போதைக்காக உடல்வலி நிவாரண மாத்திரைகள் என எந்த மாத்திரைகளையும் பயன்படுத்தக்கூடாது" என்றனர்.
from Latest News

0 கருத்துகள்