பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரான நயினார் நாகேந்திரன் இல்லத்துக்கு வந்த பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், ``ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அந்த வேட்பாளருக்கு காங்கிரஸ் மாவட்டத் தலைவரே அதிருப்தி தெரிவித்திருக்கிறார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-01/7fe42254-8c96-4716-b3d1-ca2ebace94ee/Annamalai_1.jpg)
தி.மு.க கூட்டணிக்கு இடைத்தேர்தலில் தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் தான் அக்கட்சியின் மூத்த அமைச்சர் தலைமையில் இப்போதே தேர்தல் வேலைகளைத் தொடங்கி விட்டார்கள். ஆனாலும் முதலில் தேர்தல் களத்தில் இருப்பவர் தான் வெற்றி பெறுவார் என்பதில்லை. அவர்களின் நிலைமை மோசமாக இருப்பதாலேயே மூத்த அமைச்சர்களைக் களத்துக்கு அனுப்பி நல்லநாள் பார்த்து வேலைகளைத் தொடங்கி விட்டார்கள்.
இதுவரை நடந்த இடைத்தேர்தல்களில் 80 சதவிகிதம் ஆளுங்கட்சியே வெற்றிபெற்றிருக்கிறது. பண பலம், அதிகார துஷ்பிரயோகம் காரணமாக ஆளுங்கட்சி வெற்றி பெற்றாலும் கூட அதன் பின்னர் வரக்கூடிய பொதுத் தேர்தல்களில் மக்களின் செல்வாக்கு இல்லாததால் தோல்வியடைகிறார்கள். எங்கள் கூட்டணியைப் பொறுத்தவரை,மக்களால் ஏற்றுக் கொள்ளக்கூடிய நியாயமான வேட்பாளரை நிறுத்துவோம்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-01/beed390c-7245-4cfc-b9ba-46b5946b61ee/Annamalai_2.jpg)
இந்த இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் பலத்தை நிரூபித்துக் காட்டவேண்டிய அவசியம் கிடையாது. வரும் நாடாளுமன்றத் தேர்தல் தான் பிரதமர் மோடியின் ஆட்சி தொடர்வதற்கான தேர்தல் அந்தத் தேர்தல் எங்களுக்கு முக்கியமானது. அதில் நாங்கள் கவனம் செலுத்துவோம். இந்த இடைத்தேர்தல் வெற்றி, தோல்வி என்பது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது அல்ல.
எங்களின் கூட்டணியில் அ.தி.மு.க பிரதான கட்சியாக இருக்கிறது. அதனால் பலம் வாய்ந்த வேட்பாளரை ஆதரித்து தி.மு.க-வைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.தேர்தல் ஆணையம், பறக்கும் படை போன்றவற்றை அமைத்தாலும் அமைச்சர்கள் கடந்த 20 மாதங்களாகச் சம்பாதித்த பணம் அனைத்தும் வெளியே வரத்தான் போகிறது அதை நீங்களும் பார்ப்பீர்கள்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-01/0e55a4fa-59a7-4266-bcc0-469ba241b86c/Annamalai_3.jpg)
ஆளுநர் மாளிகையில் நடைபெறும் குடியரசு தினவிழா தேநீர் விருந்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். அது டீ செலவை மிச்சப்படுத்தும். எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதால் நாங்கள் கலந்துகொள்வோம். அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும் என பிரதமர் நினைப்பதாக ஓ.பி.எஸ் தெரிவித்திருப்பது தொடர்பாக உரிய நேரத்தில் பதில் சொல்கிறேன்” என்று அண்ணாமலை தெரிவித்தார்
from Latest News
0 கருத்துகள்