Header Ads Widget

அமமுக-வினருக்கு தடைப்போட்ட டி.டி.வி.தினகரன்?... பதுங்கிய நிர்வாகிகள்; அப்செட்டில் சசிகலா?!

சசிகலா தஞ்சாவூரில் இருந்தபடியே, கடந்த சில தினங்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவரை அ.ம.மு.க நிர்வாகிகள் யாரும் சந்திக்க செல்லக் கூடாது என டி.டி.வி. தினகரன் மறைமுகமாக உத்தரவிட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் மகளிரணியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் மட்டும் சசிகலாவை சந்தித்துடன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டது அ.ம.மு.க வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சசிகலா

சசிகலா, தஞ்சாவூர் அருளானந்தநகர் இல்லத்தில் தங்கியிருந்தபடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சசிகலா தஞ்சாவூரில் இருந்தால் அவரை பார்ப்பதற்கு ஏராளமானவர்கள் வருவது வழக்கம். அ.தி.மு.க தரப்பிலிருந்து யாராவது வருகிறார்களா என்பதை அறிய ஊடகத்தினரும் சசிகலா வீட்டின் முன்பு முகாமிடுவது வழக்கம்.

குறிப்பாக அ.ம.மு.க-வில் நிர்வாகிகள் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் வந்து சசிகலாவை சந்தித்து செல்வார்கள். ஆனால் தற்போது சசிகலாவுக்கும், டி.டி.வி. தினகரனுக்கு இடையே கடும் பனிப்போர் நிலவி வருவதாக சொல்லப்படுகிறது. சசிகலா இல்லாமலேயே தனிரூட்டில் டி.டி.வி. தினகரன் பயணிக்க தொடங்கி விட்டார்.

சசிகலா

இந்நிலையில் அ.ம.மு.க நிர்வாகிகள் யாரும் சசிகலாவை சந்திக்க கூடாது என தினகரன் மறைமுக உத்தரவு போட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் சசிகலாவை பார்க்க யாரும் வரவில்லை. ஆனால் தஞ்சாவூர் மாநகராட்சி கவுன்சிலரான அ.ம.மு.க பிரமுகர் வழக்கறிஞர் கண்ணுக்கினியாள் மட்டும் சசிகலாவை சந்தித்துடன் அவருடன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டது தஞ்சாவூர் அ.ம.மு.க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சசிகலா தரப்பினர், தினகரன் செல்லக்கூடாது என தடுத்தும் தைரியமாக சின்னம்மாவை பார்க்க வந்திருப்பதாக கண்ணுக்கினியாளை பாராட்ட, `தலைவர் எப்படி எடுத்துக் கொள்வார் என தெரியவில்லை?’ என அவர் கவலை தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து உள்விவரங்கள் அறிந்த சிலரிடம் பேசினோம், ``சசிகலா, டி.டி.வி.தினகரன் இடையேயான மனக்கசப்பு தற்போது அதிகரித்துள்ளது என்கிறார்கள்.

சசிகலா, கண்ணுக்கினியாள்

சென்னையில் எம்.ஜி.ஆர் நினைவு நாளில் மரியாதை செலுத்த சசிகலா சென்ற போது, சசிகலா வாகனத்துக்கு முன்னதாகவே சென்று தினகரன் எம்.ஜி.ஆர் சமாதியில் அஞ்சலி செலுத்தினார். அதன் மூலம் இருவருக்கும் நிலவும் சண்டை அப்பட்டமாக வெளிப்பட்டது. கடந்த முறை சசிகலா தஞ்சாவூர் சென்ற போது அவரை சந்தித்த சில அ.ம.மு.க நிர்வாகிகள் கட்சியை விட்டு நீக்கப்பட்டதும் குறிப்பிடதக்கது.

இந்நிலையில் தற்போது சசிகலாவை யாரும் சந்திக்க செல்லக்கூடாது என தினகரன் மறைமுகமாக கூறியதாக சொல்லப்படுகிறது. அதனால் தஞ்சாவூரில் தங்கியபடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சசிகலாவை யாருமே சந்திக்க வில்லை. நேற்று மதியம் வரை சசிகலா வீட்டில் இருப்பார் சந்திப்பவர்கள் சந்திக்கலாம் என சசிகலா தரப்பினர் தகவல் தந்ததாக சொல்லப்படும் நிலையிலும் அ.ம.மு.க நிர்வாகிகள் யாரும் செல்லவில்லை.

முள்ளி வாய்க்கால் முற்றத்தில் சசிகலா

இந்நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சி கவுன்சிலரும், அ.ம.மு.க-வின் தஞ்சை மாநகர, மாவட்ட மகளிரணி செயலாளரான கண்ணுக்கினியாள் சசிகலாவை சந்தித்தார். சசிகலா, வீரவணக்க நாளை முன்னிட்டு விளாரில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு சென்று மொழிப்போர் தியாகிகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதிலும் கலந்து கொண்ட கண்ணுக்கினியாள் சசிகலா புறப்படும் வரை உடன் இருந்தார்.

அ.ம.மு.க பொருளாளரான முன்னாள் எம்.எல்.ஏ ரெங்கசாமி, தன்னால் செல்ல முடியாத சூழலில் தன் மகனை அனுப்பி சசிகலாவை சந்திக்க வைத்தார். இதனை அ.ம.மு.க-வினர் தினகரன் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்” எனத் தெரிவித்தனர்.

அ.ம.மு.க தரப்பினர் கூறுகையில், ``சசிகலாவை சந்திக்க செல்லக்கூடாது என மறைமுக உத்தரவு எதுவும் யாருக்கும் வரவும் இல்லை, அனுப்பவும் இல்லை” என்றனர். இது குறித்து கண்ணுக்கினியாளிடம் பேசினோம், ``உறவினர் என்ற அடிப்படையிலேயே சசிகலாவை பார்த்தேன். அ.ம.மு.க நிர்வாகியாக செல்லவில்லை” என்று முடித்துக்கொண்டார்.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்