Header Ads Widget

``இருவருக்கும் ஒரே இருக்கையா?" - சபாநாயகரை சந்தித்த எடப்பாடி தரப்பு

அ.தி.மு.க பன்னீர், எடப்பாடி என இரண்டு தரப்புகளாகப் பிரிந்துள்ளது. இருவரும் ஓரணியாகச் செயல்பட்ட போது எதிர்க்கட்சித் தலைவர் இருக்கையில் இருவரும் இணைந்தே அமர்ந்திருப்பார்கள். ஆனால், இருவரும் இரண்டு அணிகளாக செயல்பட்டு வருவதால் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பொறுப்பிலிருந்து பன்னீரை நீக்குவதாக எடப்பாடி அறிவித்தார். பன்னீருக்குப் பதிலாக எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரைத் தேர்வு செய்தனர். இதனால், கடந்த மானியக் கோரிக்கை விவாதம் தொடங்குவதற்கு முன்பாக ஆர்.பி.உதயகுமாரை எதிர்கட்சித் துணைத்தலைவராக அங்கீகரித்து அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் அப்பாவுக்குக் கடிதம் அனுப்பினார். அதேபோல ஓ.பி.எஸ் தரப்பிலிருந்தும் கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால், எடப்பாடி கடிதம் மீது சபாநாயகர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. அப்போது, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர், எம்.எல்.ஏக்களின் இருக்கைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

சபாநாயகர் அப்பாவு

இந்தநிலையில், இரண்டாவது முறையும் துணைத்தலைவர் இருக்கை விவகாரம் குறித்து எடப்பாடி தரப்பு சபாநாயகருக்குக் கடிதம் அளித்தது. கடந்த அக்டோபர் மாதம் சட்டப்பேரவை கூடிய போது எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை மாற்றப்படாமல் ஓபிஎஸ் அதே இருக்கையில் அமர்ந்திருந்தார். இதனால், அதிருப்தி அடைந்த எடப்பாடி தரப்பு துணைத்தலைவர் பதவி விவகாரம் குறித்து உடனடியாக சபாநாயகர் முடிவைத் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி சட்டப்பேரவையில் அ.தி.மு.க உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால், அனைவரும் பேரவையிலிருந்து கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். அ.தி.மு.க உறுப்பினர்களின் நடவடிக்கைகளுக்குச் சபாநாயகர் அப்பாவு கடும் கண்டனம் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை

அப்போது, எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் குறித்து சபாநாயகர் அளித்த விளக்கத்தில், "இருக்கைகள் விவகாரத்தைப் பொறுத்தவரை யாரை எங்கே அமர வைக்க வேண்டும் என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. இன்று அந்த பிரச்னையைக் கையில் எடுத்துக் கொண்டு அ.தி.மு.க.வினர் நடந்து கொண்ட விதத்தை நாம் அனைவரும் பார்த்தோம். இருக்கை விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டியது எனது உரிமைக்கு உட்பட்டது" என்றார்.

இந்தச்சூழலில், இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டம் ஆளுநர் ரவி உரையுடன் நேற்று தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சித்தலைவரின் இருக்கையில் எடப்பாடியும், பன்னீரும் அருகருகே அமர்ந்திருந்தனர். முதல்நாள் கூட்டம் முடிந்தவுடன் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது. மாலை 5 மணிக்குக் கூடிய கூட்டம் அரை மணி நேரம் மட்டுமே நடந்தது.

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை குறித்த அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள் கூறுகையில், "சட்டப்பேரவையில் எதிர்கட்சித் துணைத்தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் இன்னும் இறுதி முடிவை எடுக்காமல் இருக்கிறார். ஏற்கெனவே இரண்டு முறை கடிதம் கொடுத்துள்ளோம். இன்றைய கூட்டத்தில் இதுகுறித்து தான் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரைத் தேர்வு செய்தது குறித்தும், வழங்கப்பட்ட கடிதங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் நாளை(இன்று) காலை 9.15 மணிக்குச் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துப் பேச உள்ளோம்" என்றனர்.

அதன்படி இன்று காலை எடப்பாடி தரப்பு சபாநாயகர் அப்பாவு-வை சந்தித்து பேசியது. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, ஆர்.பி.உதயகுமார், செங்கோட்டையன் உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர். மேலும் பன்னீர்செல்வமும் சபாநாயகரை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சபாநாயகர் என்ன முடிவு எடுப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்