Doctor Vikatan: எனக்கு எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்பு 138 என்ற அளவில் இருக்கிறது. இதை உணவு மற்றும் உடற்பயிற்சிகளின் மூலம் கட்டுப்படுத்த முடியுமா அல்லது மாத்திரைகள் அவசியமா?
-Elangovan K, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் மருத்துவர் அஷ்வின் கருப்பன்.
எல்டிஎல் என்பது கெட்ட கொலஸ்ட்ராலை குறிப்பது. அந்த வகை கொலஸ்ட்ரால் அதிகமாவதால் ஹார்ட் அட்டாக்கின் அபாயம் அதிகரிக்க வாய்ப்புண்டு. இந்தக் கொழுப்பின் அளவு 100-க்கு குறைவாக இருக்க வேண்டும். உங்களுக்கு இருக்கும் 138 என்பது அதிகமான அளவுதான்.
ஒருவரின் வயதைப் பொறுத்துதான் இதை உணவின் மூலம் குறைக்க முடியுமா அல்லது சிகிச்சை தேவையா என்று முடிவு செய்ய முடியும். சிகிச்சை என்றதும் அதெல்லாம் வயதானவர்களுக்குதான், இளைஞர்களுக்கு அவசியமில்லை என நினைக்க வேண்டாம். இன்றைய சூழலில் இளைஞர்கள் பலரும் உடலியக்கம் இன்றி இருக்கிறார்கள். வொர்க் ஃப்ரம் ஹோம் செய்கிறார்கள். ஆரோக்கியமில்லாத வெளி உணவுகளைச் சாப்பிடுகிறார்கள். அதனால் அவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். அத்தகைய சூழலில் உள்ளவர்களுக்கும் மருந்துகள் தேவைப்படலாம்.
அதாவது கெட்ட கொழுப்பு அதிகமாக இருக்கும் நிலையில் முதல் கட்டமாக அதைக் குறைக்க மருந்துகள் எடுத்துக்கொண்டு, மூன்று மாதங்கள் கழித்து வாழ்வியல் முறையைச் சரியாக்குவதன் மூலம் மருந்துகள் இல்லாமல் வாழலாம். ஆனால் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள பல மக்களும் தயாராக இல்லை. அப்படிப்பட்டவர்கள் தொடர்ச்சியாக மாத்திரைகள் எடுக்க வேண்டி இருக்கும்.
எந்த வயதினராக இருந்தாலும் கெட்ட கொழுப்பு அதிகமிருக்கும் நிலையில், உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றைப் பின்பற்றுவதோடு, குறிப்பிட்ட காலம்வரை மருந்துகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றே மருத்துவ கைடுலைன்களும் அறிவுறுத்துகின்றன. 60 வயதுக்கு மேலானவர்களும், இணை நோய்கள் உள்ளவர்களுக்கும் அவசியம் இதற்கு மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவை தவிர, தினமும் 10 ஆயிரம் அடிகள் நடக்க வேண்டும். உணவில் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். எண்ணெய்ப் பண்டங்களைத் தவிர்க்க வேண்டும். நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். தினமும் 6 மணி நேரம் தூங்க வேண்டும். இவற்றையெல்லாம் முறையாகப் பின்பற்றினால் சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் போன்றவை வர வாய்ப்பில்லை. கொலஸ்ட்ரால்தானே என்ற அலட்சியத்தில் இதை கவனிக்காமல் விட்டால், ரத்த நாளங்கள் தடித்துவிடும். ரத்த அழுத்தமும் சேர்ந்து வரும்.
எனவே நிறைய புரதச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவது, வெளியில் அசைவ உணவுகளைச் சாப்பிடுவது போன்றவற்றைக் குறைத்து, உடற்பயிற்சியை அன்றாட வழக்கமாக்கிக் கொண்டாலே இந்தப் பிரச்னையிலிருந்து மீளலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Latest News

0 கருத்துகள்