Header Ads Widget

Doctor Vikatan: மெனோபாஸை உறுதிப்படுத்த டெஸ்ட் ஏதாவது உண்டா?

Doctor Vikatan: எனக்கு கடந்த 8 மாதங்களாக பீரியட்ஸ் வருவதில்லை. வயது 49. இதை மெனோபாஸ் என்று எடுத்துக்கொள்ளலாமா? மெனோபாஸ் வந்துவிட்டதை உறுதிப்படுத்த டெஸ்ட் ஏதாவது உண்டா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

மெனோபாஸை உறுதிப்படுத்தும் டெஸ்ட் எல்லாப் பெண்களுக்கும் அவசியமில்லை. 50 வயதைக் கடந்த ஒரு பெண்ணுக்கு, தொடர்ந்து ஒரு வருடமாக பீரியட்ஸ் வரவில்லை என்றால் அந்தப் பெண்ணுக்கு மெனோபாஸ் வந்துவிட்டதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். சில பெண்களுக்கு 40 வயதிலேயேகூட 'ப்ரீமெச்சூர் மெனோபாஸ்' வரலாம்.

அப்படி வரும்போது மருத்துவர்கள் ஹார்மோன் டெஸ்ட் எடுக்கப் பரிந்துரைப்பார்கள். அதாவது ஈஸ்ட்ரோஜென் மற்றும் எஃப்.எஸ்.ஹெச்(FSH) போன்றவற்றுக்கான ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும். ஒன்றரை மாத இடைவெளியில் இந்த ரத்தப் பரிசோதனையை இருமுறை செய்ய வேண்டியிருக்கும். அதில் ஹார்மோன் அளவுகளைப் பார்த்து அந்தப் பெண்ணுக்கு மெனோபாஸ் வந்துவிட்டதா என்பதை உறுதிசெய்வோம்.

ஆய்வுகள் மற்றும் தொடர் கண்காணிப்பின் அடிப்படையில்தான் இந்த ஒரு வருடம் என்பது குறிப்பிடப்படுகிறது. சில பெண்களுக்கு ஒரு வருடம் பீரியட்ஸ் வராமலிருந்து, அதன் பிறகு பீரியட்ஸ் வரலாம். கருமுட்டைகளை உற்பத்தி செய்கிற சினைப்பையானது சட்டென செயலிழக்காது. சிலருக்கு அரிதாக ஸ்பாட்டிங் மாதிரி ரத்தப்போக்கு தென்படலாம். ஒரு வருடம் வரை பீரியட்ஸே வராமலிருந்து, பீரியட்ஸ் வந்தால், அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

மெனோபாஸ்

அது கர்ப்பப்பையில் புற்றுநோய் தாக்கியிருப்பதன் அறிகுறியாகக்கூட இருக்கலாம். அந்த நிலையில் மருத்துவரை அணுகினால், கர்ப்பப்பையின் லைனிங் அளவை ஸ்கேன் செய்து பார்ப்போம். அது 5 மில்லிமீட்டருக்கும் அதிகமாக இருப்பது தெரிந்தால் அடுத்தகட்டமாக பயாப்சி பரிசோதனை செய்யச் சொல்வோம். அதைவைத்து ப்ளீடிங் ஆனதற்கான காரணம் கண்டறியப்பட்டு, சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்