சிவகாசி சித்துராஜபுரம் தேவிநகரை சேர்ந்தவர் பத்மநாபன் (67). இவர் சிவகாசியில் அச்சகம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 25-ம் தேதி குடும்பத்துடன் திருப்பதி கோயிலுக்கு சென்றார். இந்நிலையில் ஜனவரி 26-ந்தேதி, பத்மநாபனின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் பணம், ஒரு கிலோ வெள்ளி மற்றும் 90 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இந்த தகவலறிந்த பத்மநாபன் சிவகாசி நகர் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் அவ்வழியே டூவீலரில் வந்த இருவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசபெருமாள் உத்தரவின்பேரில் சரக காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடும்பணி நடைபெற்றுவந்தது. இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் திருவாரூர் மாவட்டம் கொரவசேரி பகுதியை சேர்ந்த மணிகண்டன்(33) மற்றும் பொள்ளாச்சி அருகே சிஞ்சுவாடி பகுதியை சேர்ந்த ஹரிபிரசாத்(28) ஆகியோர் என்பதை கண்டுபிடித்த தனிப்படையினர், விரைந்துச்சென்று பதுங்கியிருந்த அவர்கள் இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 58 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான இருவர் மீதும் சென்னை, கோயம்புத்துார், திருநெல்வேலி உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் 15-க்கும் மேற்பட்ட குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
from Latest News

0 கருத்துகள்