Header Ads Widget

``எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் அடிப்படையில் உண்மையான சிவசேனாவை முடிவு செய்யமுடியாது" - உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் செயல்பட்டு வந்த சிவசேனா, கடந்த ஆண்டு ஜூன் மாதம் இரண்டாக உடைந்தது. தற்போது சிவசேனாவின் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயிடம் இருக்கின்றனர். உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகிய இரண்டு பேரும் தங்களது அணிதான் உண்மையான சிவசேனா என்று கூறிக்கொண்டிருக்கின்றனர். இப்பிரச்னை இப்போது தேர்தல் கமிஷனில் இருக்கிறது. தேர்தல் கமிஷன் இரு தரப்பினரிடமும் இது தொடர்பாக விசாரணை நடத்தி முடித்துவிட்டது. விரைவில் தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த உத்தவ் தாக்கரே, ``முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உட்பட 16 சிவசேனா எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் நாங்கள் தாக்கல் செய்துள்ள மனு மீது முதலில் முடிவு செய்யவேண்டும். அதன் பிறகு உண்மையான சிவசேனா எது என்பதை தேர்தல் கமிஷன் முடிவு செய்யவேண்டும். சுப்ரீம் கோர்ட் 16 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. நாங்கள் தேர்தல் கமிஷன் கேட்ட அனைத்தையும் கொடுத்திருக்கிறோம். அப்படி இருந்தும் துரோகிகள் அணி தங்களிடம் அதிக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் இருப்பதாக கூறி தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று கூறிக்கொண்டிருக்கிறது.

எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் அடிப்படையில் உண்மையான சிவசேனா எது என்பதை முடிவு செய்யக்கூடாது. மக்கள் பிரதிநிதிகளின் அடிப்படையில் கட்சி முடிவு செய்யப்பட்டால் பணக்காரர்கள் யாரும் அவர்களை விலைக்கு வாங்கி பிரதமராகவோ அல்லது முதல்வராகவோ மாற முடியும். கட்சியின் சட்டத்தில் இல்லாத ஒரு பதவி ஏக்நாத் ஷிண்டே உருவாக்கிக்கொண்டிருக்கிறார். நாங்கள் கட்சியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறோம். கட்சியில் தலைவர் பதவியை உருவாக்கி தேர்தல் கமிஷனின் ஒப்புதலோடு செயல்பட்டு வருகிறோம்.

ஏக்நாத் ஷிண்டே-உத்தவ்

அவர்கள் கட்சியின் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டுள்ளனர். எனவே அவர்கள் பதவி பறிப்பை எதிர்நோக்கி இருக்கின்றனர். பதவி பறிக்கப்பட்ட பிறகு எப்படி சிவசேனாவுக்கு உரிமை கோர முடியும்” என்று கேள்வி எழுப்பினார். உத்தவ் தாக்கரே தரப்பில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் 16 பேரின் பதவியை பறிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு வரும் 14-ம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது. உத்தவ் தாக்கரேயின் சிவசேனா தலைவர் பதவி கடந்த மாதம் முடிவடைந்தது. புதிதாக தலைவராக பதவி ஏற்றுக்கொள்ள தேர்தல் கமிஷன் ஒப்புதல் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்