காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை அண்மையில் நிறைவு செய்தார். இந்த யாத்திரையின் நிறைவு விழா காஷ்மீர் ஸ்ரீநகரில் நடந்தது. இந்த விழாவில் கர்நாடக முன்னாள் முதல்வரும், கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா பங்கேற்கவில்லை. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான சீட் தொடர்பாக சித்தராமையாவுக்கும் காங்கிரஸின் மாநிலத் தலைவர் டி.கே. சிவகுமாருக்கும் இடையே இருக்கும் கருத்து வேறுபாடை வெளிப்படுத்துகிறது என பேசப்பட்டது.
ஆனால், மோசமான வானிலை காரணமாக ஸ்ரீநகர் செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டதால், பாரத் ஜோடோ யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க முடியவில்லை என சித்தராமையா விளக்கமளித்திருந்தார். இந்த நிலையில், சித்தராமையா பெயரில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ஒரு கடிதம் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. அதில், ``வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் சீட் விவகாரம் தொடர்பான கருத்து வேறுபாடுகள் கட்சியில் பெரும் பிரிவை ஏற்படுத்தும்" என எச்சரிக்கை தொணியில் குறிப்பிடப்பட்டிப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் சித்தராமையா அந்தக் கடிதத்துக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "காங்கிரஸ் தலைவருக்கு நான் எந்தக் கடிதமும் எழுதவில்லை. அது போலிக் கடிதம். இப்படித்தான் பா.ஜ.க-வினர் சதி செய்து எங்கள் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் தலைவர்களைப் போல மிகக் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கவிருக்கிறேன். இந்த தவறான செயலுக்கு காரணமானவர்கள் கண்டுபிடித்து தண்டிக்கப்படுவார்கள். எனக்கும் கட்சித் தலைவருக்கும் இடையே உள்ள உறவை சீர்குலைக்கவேண்டும் என்ற தீய நோக்கத்தில் சில விஷமிகள் இதை செய்துள்ளனர். இந்த கடிதத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.
from Latest News

0 கருத்துகள்