Header Ads Widget

`பலருக்கு சம்பளம் வரவில்லை’ - அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் வேதனை

``அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த மாதத்துக்கான சம்பளம் வழங்கப்படவில்லை" என்ற புகார் பல மாவட்டங்களில் எழுந்துள்ளது.

பள்ளிக் கல்வித்துறை

தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளைப் போல அரசு உதவிபெறும் பள்ளிகள் பல செயல்பட்டு வருகின்றன. வழக்கமாக மாதத்தின் கடைசி நாளில் ஒவ்வொரு ஆசிரியரின் வங்கிக் கணக்கில் மாத ஊதியம் வரவு வைக்கப்படும்.

ஆனால், இந்த மாதம் பிறந்து 3 நாள்கள் ஆகியும் இதுவரை பலருக்கும் ஊதியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்பதால் பல மாவட்டங்களில் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். சில மாவட்டங்களில் போராட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆசிரியர்கள், "ஒவ்வொரு மாதமும் ஆசிரியர்களுக்கான சம்பள பட்டியலை நிதித்துறையின் ஐ.எஃப்.எச்.ஆர்.எம்.எஸ் எனும் இணையதளத்தில் தலைமையாசிரியர்கள் பதிவேற்றம் செய்வார்கள். இதை 16-ம் தேதியிலிருந்து 28-ம் தேதி வரை பதிவேற்றம் செய்வார்கள்.

ஆனால், கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதிக்கு பிறகு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள பட்டியலை பதிவேற்றம் செய்ய முடியவில்லை. நிதுத்துறையின் இணைய தளம் ஏற்க மறுத்துள்ளது. இதுகுறித்து அப்போதே கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தோம். இதை இந்த பிரச்னை ஏற்பட்ட நாளிலிருந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. டிஜிட்டல் தளத்தில் பிரச்னையா? அல்லது அரசு நிதியே ஒதுக்கவில்லையா? என்பது தெரியவில்லை.

ஒவ்வொரு மாதமும் ஊதியம் வந்தால்தான் குடும்பத்தின் செலவுகளை செய்ய முடியும். குறிப்பாக வாங்கியுள்ள ஒவ்வொரு வங்கிக் கடனுக்கும் இ.எம்.ஐ செலுத்த முடியும். குறிப்பிட்ட தேதியில் தவணை செலுத்தவில்லையென்றால் அபராதம் விதிப்பார்கள். அதுமட்டுமின்றி ஒவ்வொரு ஆசிரியருக்கும் மருத்துவச்செலவு உள்ளிட்ட பல பிரச்னைகள் உள்ளது. இந்த மாதம் எங்களுக்கு ஊதியம் வராததால் மிகவும் நொந்து போயிருக்கிறோம்" என்றனர்.

போராட்ட அறிவிப்பு

மாநிலத்தில் சில இடங்களில், 15-ம் தேதிக்கு முன்னர் பதிவிட்டவர்களுக்கு மட்டும் சம்பளம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் இந்த பிரச்னை எழுந்துள்ள நிலையில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்-அலுவலர் கூட்டமைப்பினர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போன்ற அமைப்புகள் போராட்டங்களை அறிவித்துள்ளன.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்