பெண்களுக்கு தங்கள் திருமண நாள் மிகவும் முக்கியமான நாளாகும். அந்த நாளை தங்கள் கணவர்கள் மறந்துவிட்டால், அவர்களுக்கு கடும் கோபம் வரும். அப்படி ஒரு சம்பவம் மும்பையில் நடந்திருக்கிறது. மும்பை கோவண்டி பகுதியில் வசிப்பவர் விஷால் (32). இவருடைய மனைவி கல்பனா. இருவரும் தனித்தனி இடங்களில் வேலை செய்து வருகின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு அவர்களுக்கு திருமணம் நடந்தது. இந்த நிலையில், அண்மையில் இந்தத் தம்பதியின் திருமண நாள் வந்திருக்கிறது. வேலையில் பிஸியாக இருந்த விஷால், தனது திருமண நாளை மறந்துவிட்டார். இது குறித்து விஷாலிடம் கேட்டு கல்பனா தகராறு செய்தார்.
மறுநாள் மாலையில் விஷால் தனது இரு சக்கர வாகனத்தை கழுவிக்கொண்டிருந்தார். அந்நேரம் வேலைக்குச் சென்றுவிட்டு கல்பனா வீட்டுக்கு வந்தார். கணவனைப் பார்த்ததும் மீண்டும் திருமண நாளை மறந்ததை சுட்டிக்காட்டி அவரை கடுமையாகத் திட்டியதாக தெரிகிறது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், கல்பனா போன் செய்து தன்னுடைய சகோதரன், பெற்றோரை வரவழைத்தார். கல்பனாவின் சகோதரர் வந்து விஷாலுடன் சண்டையிட்டதோடு, அவரது இரு சக்கர வாகனத்தையும் சேதப்படுத்தினார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-02/09d2ee91-0695-4d84-ab9e-3ea786017aa0/istockphoto_1321546697_170667a.jpg)
இந்தச் சண்டை காட்கோபரில் இருக்கும் விஷாலின் பெற்றோர் வீட்டுக்குத் தெரியவந்தது. விஷால் பெற்றோர் வீட்டில் கல்பனா, அவர் சகோதரர், பெற்றோர் வந்து பிரச்னை குறித்துப் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் இங்கும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. அவர்களுக்குள் பிரச்னை அதிகரிக்கத்தான் செய்தது.
கல்பனா கோபத்தில் தன்னுடைய மாமியாரை அடித்துவிட்டார். இதனால் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். இதையடுத்து விஷாலும், அவர் பெற்றோரும் காட்கோபர் காவல் நிலையம் சென்று புகார் செய்தனர். அதனடிப்படையில் போலீஸார் கல்பனா, அவர் பெற்றோர், சகோதரனுக்கு எதிராக வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
from Latest News
0 கருத்துகள்