Header Ads Widget

``நிர்வாகம் நாம் அனைவரும் சேர்ந்திழுக்கும் தேர்; விரைவாகச் செய்தால் நிர்வாகம் நேராகும்!" - ஸ்டாலின்

தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்திவரும் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் (Iconic Projects) தொடர்பான முதல் ஆய்வு கூட்டம் கடந்த 9-ம் தேதி நடந்தது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது ஆய்வுக் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.

ஆய்வுக் கூட்டத்தில், எரிசக்தி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள், போக்குவரத்து, சிறப்பு முயற்சிகள், பொதுப்பணி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகம், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள், நீர்வளம் மற்றும் மருத்துவம்–மக்கள் நல்வாழ்வு ஆகிய 14 துறைகளைச் சார்ந்த நடைமுறையிலுள்ள 68 திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும், 6 எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் ஆய்வுக்கூட்டம்

ஆய்வுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ``ஆய்வு மேற்கொள்ளப்படுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, இவை தமிழ்நாட்டின் பெருமையை மேலும் உயர்த்திடும் திட்டங்களாகும். இவற்றில் தாமதம் ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும், தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டும். இரண்டு, முக்கியத் துறைகளின் செயலாளர்கள், அரசின் பெருந்திட்டங்கள் குறித்து அறிந்திருக்க வேண்டும். ஒரு திட்டத்தின் செயலாக்கத்துக்கு, மற்றொரு துறை தேவையான அனைத்து அனுமதிகளையும் வழங்கி, தேவையற்ற கேள்விகளைத் தவிர்த்து, முன்னேறிச் செல்ல பாதை வகுக்க வேண்டும். அதற்கு உங்களின் முழு ஒருங்கிணைந்த பங்களிப்பு தேவை. அதற்காகவும்தான் இந்த ஆய்வுக்கூட்டம்" என்றார்.

ஸ்டாலின்

தொடர்ந்து பேசிய அவர், ``அரசு நிர்வாகம் என்பது, நாம் அனைவரும் சேர்ந்திழுக்கும் தேர். அதை விரைவாகச் செய்தால், நிர்வாகம் நேராகும். எனவே தேர் நிலையிலேயே இருப்பதற்காக செய்யப்பட்டதல்ல. திட்டங்கள், காகிதத்தில் இருப்பதற்காக வரையப்பட்டதல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும். ஆகவே, ‘செயல் ,செயல்' என செயல்வீரர்களாக அனைவரும் இருக்க வேண்டும். குறிப்பாக, பெரிய நன்மை அளிக்கும் திட்டங்களை அரைகுறையாகச் செய்வதால், சிறு நன்மைகூட விளையாமல் போய்விடும். இதற்கு ஒரேயொரு உதாரணம் , உழவர் சந்தைகள். அதனால்தான், திட்டங்களை அதிகாரிகளின் குழந்தைகள் என்பார்கள். எனவே, அதிகாரிகள் கவனித்துப் பேணிக்காத்தால் அவை வளரும். அதிகாரிகள் கவனிக்கத் தவறினால், அவை மெலியும்.

முதல்வர் ஸ்டாலின்

பல்வேறு சிறப்புத் திட்டங்கள் விரைந்து நிறைவேற்றப்படுவதை நான் கவனித்தேன். அந்தத் திட்டங்கள் தொடர்பான துறைச் செயலாளர்களுக்கு என் பாராட்டுகள். அதேவேளை, சில திட்டங்களில் தொய்வும் சுணக்கமும் இருக்கின்றன. எனவே திட்டப்பணிகளில் முன்னேற்றமடைய இன்னும் 2 மாதங்கள் கழித்து, இதேபோன்ற ஆய்வுக்கூட்டத்தை நடத்தவிருப்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு கூடுதல் செயலாளர்கள் பங்கேற்றனர்.



from India News https://ift.tt/V9ek6My
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்