விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் மாயகிருஷ்ணன் என்பவர் தனியார் வர்த்தக நிறுவனம் ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். கிரேட் இந்தியா டிரேடிங் அகாடெமி மற்றும் மார்க்கெட்டிங் என்ற பெயரை கொண்ட அந்த நிதி நிறுவனத்தில்... 10 மாத காலத்திற்கு ரூ.50,000 செலுத்தினால் ரூ.90,000 கிடைக்கும் என்றும்; ரூ.1,00,000 செலுத்தினால் ரூ.1,80,000 என்றும்; ரூ.2,00,000 செலுத்தினால் ரூ.3,60,000-மும் கிடைக்கும் எனவும் ஆரம்பித்து ரூ.20,00,000 செலுத்தினால் ரூ.36,00,000 கிடைக்கும் என்றெல்லாம் ஆசை வார்த்தை கூறி விளம்பரம் செய்துள்ளனர்.
இதனை நம்பிய பலரும், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கின்றனர். இந்நிலையில் தான், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ள வேளாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த மண்ணுலிங்கம் என்பவர் சில மாதங்களுக்கு முன்பாக விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் இந்த நிறுவனத்தின் மீது அதிர்ச்சிகரமான புகார் ஒன்றை அளித்திருந்தார். மேற்கண்டவாறு அந்த தனியார் வர்த்தக நிதி நிறுவனம், ஆசை வார்த்தை கூறியதை நம்பிய மண்ணுலிங்கம், அவருக்கு தெரிந்த 9 பேருடன் சேர்ந்து இந்த நிறுவனத்தில் ரூ.55,00,000 வரை கட்டியிருக்கின்றனர்.
ஆனால், அந்த நிறுவனம் இவர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பாக அந்த நிறுவனத்திற்கு நேரில் சென்ற பார்த்துள்ளனர். அப்போது, அந்த நிறுவனத்தின் அலுவலகம் பூட்டியிருந்ததோடு, உரிமையாளர் உட்பட அங்கிருந்தவர்கள் தலைமறைவாக இருந்தது தெரிய வந்துள்ளது. தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த அவர்கள், அதன் பின்னரே விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார்... இந்த தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மாயகிருஷ்ணன், மஞ்சுளா, பிரபாவதி, கௌதம், மதிவாணன், முருகன், வீரமணி, செந்தில்குமார் என 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது, புகார்தாரரை போலவே சுமார் 7,000 பேரிடம் 85 கோடி ரூபாய்க்கு மேல் பெற்றுக்கொண்டு திருப்பி தராமல் ஏமாற்றியது தெரிய வந்துள்ளது. எனவே, இந்த 8 பேரையும் குற்றப்பிரிவு போலீஸார் தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில், முதற்கட்டமாக வீரமணி, செந்தில்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, பிரபாவதி, அன்பு என்ற இருவர் 18-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், திண்டிவனம் தனியார் நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மாயகிருஷ்ணன் உள்ளிட்ட இரண்டு பேரையும் விழுப்புரம் குற்றப்பிரிவு டி.எஸ்.பி சம்பத்குமார் தலைமையிலான போலீஸார் கைது செய்திருக்கின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த தனியார் நிதி நிறுவனத்தின் மோசடி குறித்தான சம்பவங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
from Latest news

0 கருத்துகள்