Header Ads Widget

ஜம்மு காஷ்மீரில் லித்தியம் - கண்டுபிடிப்பு முதல் ஏலம் வரை அறிய வேண்டியவை தகவல்கள்!

மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகள் தயாரிக்க லித்தியம் மிக முக்கியமான ஒன்று. இந்தியாவில் மின்சார வாகனங்கள் உற்பத்தியும், பயன்பாடும் அதிகரித்துவரும் நிலையில், லித்தியத்துக்கான தேவையும் அதிகரித்துவருகிறது. இந்த நேரத்தில், ஜம்மு காஷ்மீரில் 5.9 மெட்ரிக் டன் லித்தியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பொலிவியா, அர்ஜென்டினா, அமெரிக்கா, சிலி, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகள் அதிகமான லித்தியம் இருப்பு கொண்டவை.

லித்தியம் அயன்

இந்தியாவில், 2030-ம் ஆண்டுக்குள் மின்சார வாகனப் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு பல்வேறு திட்டங்களை மத்திய அரசு வகுத்திருக்கிறது. 2030 -ம் ஆண்டுக்குள் தனியார் கார்களில் 30 சதவிகிதம் மின்சார கார்களாக இருக்க வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. மேலும், வணிக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், அரசு வாகனங்கள் போன்றவை 70 - 80 சதவிகிதம் மின்சார வாகனங்களாக இருக்க வேண்டும் என்றும் அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது.

இந்த நேரத்தில்தான், ஜம்மு காஷ்மீரில் அபரிமிதமாக லித்தியம் புதையல் இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது, சீனா, ஹாங்காங், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியாவுக்கான லித்தியம் வந்துகொண்டிருக்கிறது. மின்சார வாகன உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியதிலிருந்து, லித்தியத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.

மின்சார வாகனம்

இந்த நிலையில்தான், ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரியாசி மாவட்டத்தில் உள்ள சலால் ஹைமானா பகுதியில், மிகப்பெரிய நிலவியல் ஆய்வு மூலம் லித்தியம் இருப்பு கண்டறியப்பட்டது. அங்கு, லித்தியத்தை வெட்டியெடுக்கும் பணிகளுக்கான ஏலத்தை தனியார் நிறுவனங்களுக்கு விடுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது.

இது தொடர்பான அறிவிப்பை நாடாளுமன்றத்தில் வெளியிட்ட மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ஜம்மு காஷ்மீரில் உள்ள லித்தியம் இருப்பு வரும் ஜூன் மாதம் ஏலத்தில் விடப்படும் என்றார். மேலும், லித்தியம் கனிமத் தொகுதி எந்தளவுக்கு ஏலம் போகிறது என்பதைப் பொறுத்து எந்த அளவுக்கு அதைத் தோண்டியெடுப்பது என்பது முடிவுசெய்யப்படும் என்று அவர் கூறினார்,

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஏலத்தை அரசு விரைவில் அறிவிக்க இருக்கிறது. இதற்கிடையில், ஜம்மு காஷ்மீரில் லித்தியம் சுரங்கத்துக்கான ஏல ஒதுக்கீட்டை தனியார் நிறுவனங்களுக்கு வழங்க கூடாது என்று புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி தொழில்துறையினர் கூறியிருக்கிறார்கள்.

மேலும், சுரங்கத் தொழிலில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த கோல் இந்தியா உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கு பணியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள். லித்தியம் பேட்டரி தயாரிப்பதற்கான ஆர்டர்களை சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு 50 சதவிகிதம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.

எலெக்ட்ரிக் கார்

லித்தியம் அயன் பேட்டரிகளை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. இந்தியாவில் பெரும்பாலான லித்தியம் அயன் பேட்டரிகள் சீனா, ஜப்பான், வியட்நாம் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போது, இந்தியா இதில் தன்னிறைவு அடைவதற்கு, லித்தியம் அயன் பேட்டரிகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும். 2030-ம் ஆண்டு இலக்கைக் கருத்தில் கொண்டு, ஆண்டுக்கு 10 மில்லியன் லித்தியம் அயன் பேட்டரிகளை இந்தியா உற்பத்தி செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஜம்மு காஷ்மீரில் வெட்டியெடுக்கப்படும் லித்தியத்தை உள்நாட்டிலேயே சுத்திகரிக்க வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய நிலையில், லித்தியத்தை சுத்தம் செய்வதற்கான வசதிகள் இல்லையென்றாலும், தேவையான வசதிகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.



from India News https://ift.tt/wJg39Ik
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்