Header Ads Widget

திண்டிவனம்: எதிர்ப்பு தெரிவித்த விசிக; ஹெச்.ராஜா, வேலூர் இப்ராஹிம், பாஜகவினர் கைது - நடந்தது என்ன?!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நேற்று மாலை பா.ஜ.க-வின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது. இதில், அக்கட்சியின் மூத்த தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான ஹெச்.ராஜாவும், வேலூர் இப்ராஹிம் உள்ளிட்டோரும் கலந்து கொள்வதாக இருந்தது. இதற்கிடையில், அண்மை சில தினங்களாக ஹெச்.ராஜா, வி.சி.க தலைவர் திருமாவளவன் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருவது வி.சி.க-வினரிடையே கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தான் திண்டிவனத்தில் பா.ஜ.க-வின் சாதனை விளக்க பொதுக்கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனவே, "திருமாவளவனை இழிவாக பேசிய ஹெச்.ராஜாவே திண்டிவனம் வராதே! திரும்பி செல்... இல்லையேல், திருமா திசை நோக்கி... மண்டியிட்டு மன்னிப்பு கேள்..!" என்ற வி.சி.க போஸ்டர் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.

விசிக போஸ்டர்

மேலும், "வி.சி.க சார்பில் இன்று மாலை 4 மணிக்கு மேல் ஹெச்.ராஜாவிற்கு எதிராக திண்டிவனத்தில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று பதியப்பட்ட வாட்ஸ்அப் தகவல்களாலும் பரபரப்பு ஏற்பட்டது. இதுமட்டுமின்றி, "14.03.2023 அன்று ஹெச்.ராஜா பங்குபெறும் பாஜக பொதுக்கூட்டம் திண்டிவனத்தில் நடத்துவதற்கு அனுமதிக்க கூடாது" என வி.சி.க-வின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சேரன், எஸ்.பி ஸ்ரீநாதாவை சந்தித்து மனு அளித்திருந்தார்.

எனவே, இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றால் பா.ஜ.க மற்றும் வி.சி.க-வினர் இடையே பிரச்னை ஏற்பட்டு, சட்ட ஒழுங்கு பாதிப்பு உருவாகும் என்பதற்காக நேற்றைய தினம் நூற்றுக்கணக்கான போலீஸார் திண்டிவனத்தில் குவிக்கப்பட்டனர். மேலும், பா.ஜ.க-வின் பொதுக்கூட்டத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் பாஜக தரப்பில் செய்யப்பட்டிருந்தது. 

வி.சி.க மா.செ புகார் மனு அளித்தார்

இதற்கிடையில், பா.ஜ.க-வின் இந்த கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை திண்டிவனத்தில் அரசு பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பேருந்து கண்ணாடியை உடைத்த தென்னரசு என்பவரை, திண்டிவனம் போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், திண்டிவனம் கூட்டத்தில் பங்கேற்க வந்த வேலூர் இப்ராஹிம் செங்கல்பட்டு மாவட்டத்திலும்; ஹெச்.ராஜா பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துரையிலும் முன்னெச்சரிக்கையாக அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். 

பொதுக்கூட்டத்திற்கு வந்த பா.ஜ.க-வினர் வழியிலேயே போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்நிலையில், பா.ஜ.க பொதுக்கூட்டத்திற்கு திடீரென மறுப்பு தெரிவிக்கப்பட்டதாகவும், ஹெச். ராஜா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திருமாவளவன் மற்றும் போலீஸாரை கண்டித்து பா.ஜ.க-வினர் திண்டிவனத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை உடனடியாக போலீஸார் கைது செய்து, இரண்டு அரசு பேருந்துகளில் ஏற்றி சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

பா.ஜ.க-வினர் கைது

மேலும், ஹெச்.ராஜா கைது செய்யப்பட்டதை கண்டித்து விழுப்புரத்திலும் பா.ஜ.க-வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீஸார் கைது செய்தனர். மேலும், பாதுகாப்பு கருதி நேற்று இரவும் திண்டிவனத்தில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால், திண்டிவனம் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.



from India News https://ift.tt/LYs0Z5a
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்