Doctor Vikatan: உடல் பருமனைக் குறைக்க ஆலோசனை மையங்களில் நெல்லிச்சாறு தருகிறார்கள். அதைப் பருகுவதால், தொடர்ச்சியான வயிற்றுப்போக்குடன், நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது. இவ்வாறு உடல் எடையைக் குறைப்பது ஆரோக்கியமானதா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி
![](https://gumlet.vikatan.com/vikatan/2021-05/70a9a65b-2a51-4c26-9674-a7c3b3f05040/WhatsApp_Image_2021_05_15_at_3_04_25_PM.jpeg)
நெல்லிக்காய் என்பது அற்புதமான, அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மைகள் கொண்டது. வைட்டமின் சி அதிமுள்ள நெல்லிக்காய், நம் உடலின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தக்கூடியது. உடல் பருமனைக் குறைப்பதற்கும் இது பரிந்துரைக்கப்படுகிறது.
நெல்லிச்சாறு குடிப்பதால் உடலில் நீர்வறட்சி ஏற்படுமா என்றால் அதற்கு வாய்ப்பில்லை. ஒருவேளை அப்படி ஏற்பட்டால் அந்தச் சாற்றில் வேறு ஏதோ கலந்துகொடுக்கப்பட்டிருக்கலாம் என்று அர்த்தம்.
சராசரியாக ஒரு நாளைக்கு ஓர் ஆண் 90 மில்லிகிராம் அளவும், பெண் 75 மில்லிகிராம் அளவும் எடுத்துக்கொண்டால் போதும். ஒரு நெல்லிக்காய் என்பது 200 முதல் 950 மில்லிகிராம் வரை இருக்கும். அதில் அவரவர் உடல் தன்மைக்கேற்ப சத்து உட்கிரகிக்கப்படும். உதாரணத்துக்கு 200 மில்லிகிராம் அளவுள்ள நெல்லிக்காயில் 100 மில்லிகிராம் அளவு வைட்டமின் சி சத்து உடலில் சேரலாம்.
செயற்கையான சப்ளிமென்ட்டுகள் எடுத்துக் கொள்ளும்போது தான் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் தீவிரமாகும். தவிர வைட்டமின் சி அதிகம் வேண்டும் என்ற எண்ணத்தில் சப்ளிமென்ட், கூடவே அதிக எண்ணிக்கையிலான நெல்லிக்காய் போன்றவற்றை எடுத்துக்கொள்ளும்போது வயிறு பாதிக்கப்படும். வயிற்றுப்போக்கு வரலாம். மற்றபடி நீர்வறட்சி ஏற்பட வாய்ப்பே இல்லை. வைட்டமின் சி அதிகமிருக்கும்போது வயிற்று பாதிப்பு ஏற்படுவது இயல்புதான்.
ஒருவரது உடல் வாதம், பித்தம், கபம் என எந்தத் தன்மையோடு இருந்தாலும் நெல்லிக்காயானது வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துவதால் உடல் பருமனையும், ஊளைச் சதையையும் குறைக்கும். மற்றபடி இது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தாது.
மோனோ டயட் சிகிச்சையின்போது 60 முதல் 90 மில்லி அளவு நெல்லிக்காய் ஜூஸ் தருவார்கள். அதன் மூலம் பருமன் குறையும். அதற்காக ஒரே மாதத்தில் பத்து கிலோ எடை குறைவது போன்ற மேஜிக் எல்லாம் இதில் சாத்தியமில்லை.
![](https://gumlet.vikatan.com/vikatan/2021-06/b16020c5-232e-4220-9038-032a453b5165/112.jpg)
நெல்லிக்காய் சாறு சிகிச்சையில் உடலிலுள்ள தேவையற்ற நீர்ச்சத்து வெளியேறும். நெல்லிக்காய் என்பது காயகற்ப மூலிகை. பி காம்ப்ளெக்ஸ், வைட்டமின் ஏ, சி போன்றவை இதில் அதிகம். கல்லீரலுக்கான மருந்து, முடி வளர்ச்சிக்கான மருந்து, உடலை டீடாக்ஸ் செய்யும் சிகிச்சை போன்றவற்றில் நெல்லிக்காய் பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது.
மிகையும் குறையும் நோய் செய்யும் என்பதற்கேற்ப, அமிர்தம் என்றாலும் அளவு முக்கியம். எனவே நெல்லிக்காய் நல்லது என்பதால் அளவுக்கு மீறி சாப்பிடுவதும் சரியானதல்ல.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Latest news
0 கருத்துகள்