முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் நேற்று முன் தினம் அம்பானி-அதானியை எதிர்க்கட்சிகள் குறைகூறுவதை விமர்சனம் செய்திருந்தார். அவரது கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் அஜித் பவார், மின்னணு வாக்கு இயந்திரத்தில் தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகக் கூறியதோடு, பிரதமர் நரேந்திர மோடியையும் வெகுவாகப் பாராட்டினார். இருவரின் பேச்சும் அவர்கள் பா.ஜ.க பக்கம் சாய்வதை காட்டுவதாக அமைந்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறினர். இந்த நிலையில், தற்போது சரத் பவார் மத்திய அரசை விமர்சித்திருக்கிறார். சரத் பவார் நாசிக்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், ``மத்திய அரசின் பொருளாதரக் கொள்கை தொழிலாளர்களுக்கு எதிராக இருக்கிறது. மத்திய அரசு தொழிற்சங்கங்களை பலவீனப்படுத்தும் வேலையில் ஈடுபட்டிருக்கிறது. அதோடு மத்திய அரசை சார்ந்து இருக்கும் வகையில் வேலைகளைச் செய்கிறது. தொழிலாளர்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும்.
பல இடங்களில் அரசுப் பணிகள் மூடப்பட்டிருக்கின்றன. அரசு சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிக்கப் பார்க்கிறது. வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு பிரச்னைகளுக்குத் தீர்வு காணவேண்டியிருக்கிறது.
ஆனால் ஆட்சியாளர்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை. உண்மையான பிரச்னையிலிருந்து மக்களைத் திசை திருப்ப கோயில் அரசியல் போன்ற பிரச்னையில் மக்களை ஈடுபடுத்த முயற்சி நடக்கிறது. இது மிகவும் கடினமான காலக்கட்டம். நாம் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டும். உங்கள் எதிர்காலத்தில் நீங்கள் சந்தேகப்படக்கூடாது. உங்களது பிரகாசமான எதிர்காலம் உங்களது ஒற்றுமையில்தான் இருக்கிறது.
ஒரு காலத்தில் மகாராஷ்டிரா நகரங்களில் ஏராளமான தொழிற்சாலைகள் இருந்தன. அதில் அதிகப்படியான தொழிலாளர்கள் பணியாற்றினர். 25 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை, நாட்டின் தொழில் தலைநகரமாக இருந்தது. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. மும்பையை யாரும் தொழில் தலைநகரமாகப் பார்ப்பதில்லை. ஏனென்றால் தொழிலாளர்களே இல்லை. மும்பை கிர்காவ் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட டெக்ஸ்டைல் மில்கள் செயல்பட்டு வந்தன. இப்போது அங்கெல்லாம் 30, 40 மாடிக் கட்டிடங்கள் வந்துவிட்டன. மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார். முன்னதாக சரத் பவார் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் பிரின்ட்டிங் பிரஸ்ஸைப் பார்வையிட்டார்.
from India News https://ift.tt/s0jFMLy
via IFTTT

0 கருத்துகள்