Header Ads Widget

குருப்பெயர்ச்சிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி எப்போது? - விரிவான அலசல்

இந்த உலக நிகழ்வுகள் அனைத்துக்கும் காரணம் நவகிரகங்களின் சுழற்சியே என்கிறது ஜோதிடம். பிரபஞ்ச வெளியை 12 ராசிகளாகப் பிரித்து அவற்றில் கிரகங்கள் சஞ்சாரம் செய்யும் விதத்தைப் பொறுத்து நற்பலன்களும் தீய பலன்களும் இந்த உலகிலும் தனிமனித வாழ்விலும் நிகழும் என்பது சாஸ்திரம்.

நவகிரகங்களில் பொதுவாக, வளர்பிறைச் சந்திரன், குரு, புதன், சுக்கிரன் ஆகியோர் சுபகிரகங்களாகவும், சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் அசுப கிரகங்களாகவும், சனி, ராகு, கேது ஆகியோர் குரூர கிரகங்களாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன. இதில் பூரண சுபர் குருபகவான்.

இவரது சஞ்சாரம் மட்டுமல்ல பார்வையே நற்பலன்களை வாரி வழங்கும். பிற கிரகங்களின் சஞ்சாரமும் பார்வை பலனும் சாதகமாக இல்லை என்றாலும் குருவின் பலன் இருந்தாலோ பார்வை பலம் இருந்தாலோபோதும் வாழ்வில் பல வெற்றிகளைப் பெற்றுவிடலாம்.

குருபகவான்

குருபகவானின் குணாதிசயங்கள்

குருபகவானுக்கு ‘பிரகஸ்பதி’ என்று பெயர். நவகிரக வரிசையில் செவ்வாய் பகவானுக்கும் சனி பகவானுக்கும் நடுவில் இருப்பவர் இவர்.

ராசிச் சக்கரத்தில் 9 மற்றும் 12-ஆம் வீடுகளான தனுசு, மீனம் ஆகிய ராசிகள் குருவின் ஆதிக்கத்தில் உள்ளவை. சகலருக்கும் நன்மையை அருள்பவர். பொதுவாக மற்ற சுப கிரகங்கள் பாப கிரகத்துடன் இணைந்தால், பாப கிரகத்தின் தன்மையை சுப கிரகங்களும் பெற்றுவிடும். ஆனால், குருபகவானோடு சேரும் பாப கிரகங்கள், தங்கள் பாப குணத்தைக் கைவிட்டு குருபகவானின் சுபத்துவத்தைப் பெற்று சுப பலன்கள் வழங்குவார்கள்.

குருபகவானுக்குரிய உலோகம் தங்கம். எனவேதான் ‘பொன்னன்’ என்னும் பெயரும் அவருக்கு உண்டு.

ஒரு மனிதனின் ஜாதகத்தில் குரு பலமாக இருந்தால் அவருக்கு வாழ்வில் பொன்னும் பொருளும் அதிகமாகச் சேரும். அதாவது ஜாதகத்தில் குருபகவான் தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் ஆட்சியாகவோ, தனுசில் மூலத்திரி கோண பலம் பெற்றோ, கடகத்தில் பரமோச்ச நிலை அடைந்தோ இருந்தால் அந்த ஜாதகர் வாழ்வில் பொன் பொருள் சேர்க்கை மிகுந்திருக்கும். லக்னத்துக்கோ, சந்திர ராசிக்கோ குருவானவர் 1, 4, 5, 7, 9, 10 ஆகிய இடங்களில் இருந்தாலும் செல்வ வளம் மிகுந்து காணப்படும். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய குருவின் நட்சத்திரங்களில் பிறந்து, குரு பலமும் கூடியிருக்கப் பெற்றவர்களுக்கு தங்கம் அதிகம் வைத்திருப்பவர்களாக இருப்பார்கள்.

குருபகவான்

குருப்பெயர்ச்சி

ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து குருபகவான் மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவார். அவர் எந்த ராசியில் சஞ்சாரம் செய்தாலும் அதனால் கிடைக்கும் பலன்களைவிட அவரின் பார்வையால் கிடைக்கும் பலன்கள் அதிகம். குருபகவான் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்யும்போது 5,7,9 ஆகிய வீடுகளைப் பார்ப்பார். அவ்வாறு அவர் பார்க்கும்போது 12 ராசிக்காரர்களுக்கும் அதனால் பலன் உண்டாகும். அவர் பார்க்கும் வீட்டைப் புனிதப்படுத்துவார். அந்த வீட்டில் இருக்கும் அசுப கிரகங்களின் தன்மைகளைப் போக்குவார். தீமைகள் நிகழாத வண்ணம் காப்பார். குருபகவானின் பார்வை பெறும் அந்த மூன்று வீடுகளும் பாக்கியம் பெற்றவை. எனவே பன்னிரு ராசிக்காரர்களுக்கும் அந்த மூன்று வீடுகளும் ஏதோ ஒரு பாக்கியத்தைப் பெறப் போறவைதான். உதாரணமாக இந்த ஆண்டு குருபகவான் ஏப்ரல் 22 ம் தேதி மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். இதனால் சிம்மம், துலாம், தனுசு ஆகிய ராசிகள் குருபகவானின் பார்வையைப் பெறுகின்றன. எனவே இந்த மூன்று ராசிகளும் நற்பலன்களைப் பெறப்போகின்றன. அதே வேளையில் பிற ராசிகளுக்கும் இந்தப் பார்வை ஒரளவு சுபத்துவமான பலன்களைத் தரும்.

உதாரணமாக, கன்னி ராசிக்கு 8 ம் வீட்டில் குருபகவான் அமர்கிறார். 8-ம் இடம் நற்பலன்களை வழங்கும் இடம் அல்ல என்றாலும் குருவின் பார்வை பெறும் துலாம் கன்னி ராசிக்கு இரண்டாம் இடம். பொதுவாக இரண்டாம் இடம் என்பது தன குடும்ப வாக்கு ஸ்தானம். இந்த வீட்டை குருபகவான் பார்ப்பதால் கன்னி ராசிக்காரர்களுக்கு குடும்ப உறவில் இருந்த சிக்கல்கள் தீரும். பொருளாதாரத்தில் இருந்த பிரச்னைகள் விலகும் என்று பலன் சொல்லலாம். அதுமட்டுமின்றி 8-ம் வீட்டில் இருக்கும் ராகுவோடு குரு பகவான் இணைகிறார். 8-ம் இட ராகுவை சுபத்துவப்படுத்தப் போகிறார். எனவே தேவையற்ற டென்ஷன்கள் குறையும். நற்பலன்கள் நிச்சயம் அதிகமாகும் என்று பலன் சொல்லலாம்.

இப்படிப் பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கும் குருப்பெயர்ச்சி நல்ல மாற்றங்களை வழங்குவதாகவே அமையும் என்பதால்தான் அனைவரும் ஆண்டுக்கொருமுறை நிகழும் குருப்பெயர்ச்சியை மிகவும் ஆர்வமாகக் கவனிக்கிறார்கள். குருப்பெயர்ச்சியோடு வாழ்வில் பல மாற்றங்கள் நிகழ்வதையும் தங்கள் அனுபவத்தில் உணர்ந்தவர்கள் அதை உறுதியாக நம்புகிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் குருப்பெயர்ச்சி பலன்களை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறார்கள்.

குருபகவான்

இந்த ஆண்டு குருபகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்குள் குருபகவான் அடியெடுத்து வைக்கிறார். காலச்சக்கரத்தின் முதல் வீடு மேஷம். 12 ஆண்டுகள் கழித்து குருபகவான் மீண்டும் மேஷ வீட்டில் வரும் ஏப்ரல் 22 - ம் தேதி அடியெடுத்துவைக்க இருக்கிறார். சோபகிருது வருடத்தில் நிகழும் இந்தப் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் எப்படிப்பட்ட பலன்களைத் தரும் என்று ஜோதிடரத்னா கே.பி. வித்யாதரன் கணித்துத் தர இருக்கிறார்.

குருபகவானுக்கான பிரார்த்தனை

‘ஸ்ரீகுருப்யோ நம:’ என்று சொல்லி குருபகவானை வணங்க வேண்டும். ‘கும் குருப்யோ நம:’ என்று சொன்னால், அது மந்திரமாக மாறி பலன்கொடுக்கும்.

`குருர் பிரம்மா, குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேச்வர: குரு: ஸாஷாத் பரம்ப்ரம்ம தஸ்மை ஸ்ரீகுருவே நம:’ என்று ஸ்லோகத்தைச் சொல்லி தினமும் வழிபட்டு வந்தால் குருவருளும் திருவருளும் கிடைக்கும்.



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்