தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி வீட்டு மின் இணைப்பு 2.35 கோடி, வணிகம் 37 லட்சம், தொழிற்சாலை 7 லட்சம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் 3.31 கோடி மின் இணைப்புகள் இருக்கின்றன. மாநிலத்தின் உட்சபட்ச மின்தேவையின் அளவு 15,000 மெகாவாட்டுக்கு மேல் இருக்கிறது.
இதற்கு தேவையான மின்சாரம் அனல், சூரியசக்தி, காற்றாலை, நீர் மின் நிலையங்களின் மூலமாக உற்பத்தி செய்யப்படுகிறது. பின்னர் ஆங்காங்கு இருக்கும் துணை மின்நிலையங்களுக்கு கொண்டுவரப்பட்டு அழுத்தம் குறைக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இதுதவிர மத்திய தொகுப்பில் இருந்தும், தனியாரிடம் இருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதில் அனல் மின்நிலையங்களில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவே அதிகமாகும். இந்த மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் இருக்கும் நிலக்கரி சுரங்கங்களில் இருந்து வாங்கப்படுகிறது.
பிறகு கப்பல்கள் மூலமாக உற்பத்தி நிலையங்களுக்கு கொண்டுவரப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆட்சி காலத்தில் விசாகப்பட்டினத்தில் இருந்து தமிழகத்திற்கு நிலக்கரி கொண்டு வந்ததில் ரூ.908 கோடி மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து அறப்போர் இயக்கத்தின் சார்பில் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடத்த பிப்ரவரி 27-ம் தேதி முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. இதுகுறித்து அறப்போர் இயக்கம், "மகாநதி நிலக்கரி சுரங்கம் மற்றும் ஈஸ்டர்ன் நிலக்கரி சுரங்கத்திலிருந்து விசாகப்பட்டினம் துறைமுகம் வழியாக நிலக்கரி கொண்டுவரப்பட்டது.
அதன் ஒப்பந்ததாரர் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட், துறைமுகத்தில் வரியாக கட்டிய பணத்தின் உண்மையான பில்களை சமர்ப்பிர்க்காமல் போலியாக அதைவிட பல மடங்கு பணத்தை பெற்று மோசடி ஊழல் செய்தனர். இதில் மின்சார வாரிய பொது ஊழியர்களும் கூட்டு சதி செய்திருக்கிறார்கள்.
கடந்த 2011 முதல் 2016 வரை ரூ.1028 கோடி ஊழல் நடந்துள்ளதற்கான ஆதாரங்களை அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறையில் 2018-ம் ஆண்டு சமர்ப்பித்து இருந்தது. இதன் மீது விரிவான விசாரணையை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை 2011 முதல் 2016 வரை ரூ.908 கோடி ஊழல் நடந்தது ஊர்ஜிதம் செய்திருக்கிறது.
இதற்கு காரணமான முன்னாள் தலைமை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் மற்றும் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகத்தினர் மொத்தம் 10 பேர் மீது FIR பதிந்துள்ளது" என தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் சம்மந்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் வீடுகளில் கடந்த 24-ம் தேதி சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து அமலாக்கத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகத்தின் அதிகாரிகள் மற்றும் பிறருடன் தொடர்புடைய 10 இடங்களில் ED சோதனைகளை மேற்கொண்டது.
இதில் டிஜிட்டல் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. மேலும், சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ரூ.360 கோடி நிரந்தர வைப்பு தொடர்பான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
from India News https://ift.tt/ZMxhQ4T
via IFTTT
0 கருத்துகள்