Header Ads Widget

நமக்குள்ளே... பறிகொடுக்கவா அனுப்புகிறோம் பிள்ளைகளை?!

2021-ம் ஆண்டு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில், ஐஐடி, ஐஐஎம், என்ஐடிஐஇ மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் 2014 - 21 கால கட்டங்களில் 122 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட தரவை தெரிவித்த போது, நாடே அதிர்ந்தது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார், மத்திய அரசின் கீழ் இயங்கும் உயர் கல்வி நிறுவனங் களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 61 மாணவர் தற்கொலைகள் நடந்திருக் கின்றன என்று தெரிவித்திருப்பது, அதிர்ச்சியை கவலையாக உறைய வைத்திருக்கிறது.

நம் மதிப்பெண் முறை மூலம் மிகச் சிறந்த மாணவர்களாகத் தரவரிசைப்படுத்தப் படும் மாணவர்களுக்கே ஐஐடி உள்ளிட்ட இந்தக் கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்கும் என்பதை அறிவோம். அந்த வகையில் போட்டிகள் பல சமாளித்து, தங்களை நிரூபித்து, இந்தக் கல்வி நிலையங்களுக்குள் காலடி எடுத்து வைக்கும் அம்மாணவர்களின் மனத்திடம் குறித்து குறைத்து மதிப்பிடுவதற்கு இல்லை. ‘நான் சிறந்தவன்/ள்’ என்று நிறைந்த தன்னம்பிக்கையுடன் வரும் அவர்களை, ‘நான் வாழவே தகுதியில்லாதவன்/ள்’ என்ற தாழ்வுமனப்பான்மைக்கும் அச்சத்துக்கும் தள்ளுவது எது?

இங்கு நிலவும் சாதி, வர்க்க ரீதியான ஒடுக்குமுறை, பேராசிரியர்களின் அக்கறை யின்மை, பாடச்சுமை என்று பல காரணிகளும், மாணவர்களை மன அழுத்தத்தில் தள்ளி தற்கொலை முடிவெடுக்க வைக்கின்றன என்று தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. காரணங்கள் தெரிந்தும் அது சரிசெய்யப்படவில்லை எனில், இழக்கும் உயிர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது எனில், இது எப்படி தற்கொலையாகும்? இதை `நிறுவனப் படுகொலை' என்றுதான் சொல்ல வேண்டும்.

கிராமப்புறப் பகுதிகளிலிருந்தும், இரண்டாம்நிலை நகரங்களில் இருந்தும், எளிய குடும்பங்களில் இருந்தும், ஒடுக்கப்பட்ட சாதிகளில் இருந்தும், நாட்டின் ஆகச் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களான இங்கு வந்து சேர்கிறார்கள் மாணவர்கள். ஆனால், பெரும்பான்மை மாணவர்களுடன் ஒப்பிடும்போது இவர்கள் சிறுபான்மை யாக இருப்பதால் ஆடை, ஆங்கிலம், பொருளாதாரம், சாதி எனப் பல காரணி களாலும் இவர்களுக்கு ஒதுக்கல்கள் முதல் வன்முறைகள் வரை நடக்கின்றன.

85% கட்டாய வருகைப் பதிவு, தவறினால் கோர்ஸை மீண்டும் படிக்கவேண்டிய விதிமுறை, சிக்கலான மதிப்பீட்டு முறை, ஆரோக்கியமற்ற போட்டி மனப்பான்மை என இங்குள்ள பாடச்சுமையும் மாணவர்களை வதைக்கிறது. இவற்றுக்கு எல்லாம் கவனம்கொடுக்க வேண்டிய, களைய வேண்டிய பேராசிரியர்களும் நிர்வாகமும் மாணவர்கள் பிரச்னைகளுக்கு முகம் திருப்பிக்கொள்வதும், நேரங்களில் அவர்களே பிரச்னைகளுக்குக் காரணமாவதும் வழக்கமாக உள்ளது.

பறிகொடுக்கவா அனுப்புகிறோம் பிள்ளைகளை? இப்பிரச்னையில் செயல் நீர்த்து இருக்கும் அரசை உலுக்கும் குரல்களை எழுப்புவோம் தோழிகளே!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்