Header Ads Widget

தொண்டர்களால் எழுப்பப்பட்ட தொண்டர்கள் நயினார் திருக்கோயில்! கிளியோடு சனீஸ்வரர்... அதிசயக் கோயில்!

திருநெல்வேலியில் பழைமையும் பெருமையும் வாய்ந்த பல ஆலயங்கள் உள்ளன. அப்படிப்பட்ட ஆலயங்களில் ஒன்று தொண்டர்கள் நயினார் திருக்கோயில். தொண்டர்களால் எழுப்பப்பெற்ற கோயில். அதனால் இங்குள்ள மூலவர், 'தொண்டர்கள் நயினார்' என்னும் பெயர் பெற்றார்.

திருநெல்வேலியுரை செல்வர் அருள்மிகுந்த நெல்லையப்பர் ஆலயத்திற்கு வட மேற்கு முனையில் கிழக்கு திசை நோக்கி அமையப் பெற்றுள்ளது தொண்டர்நயினார் சந்நிதி என்று வழங்கப்படும் தொண்டர்கள் நயினார் திருக்கோயில்.

முகப்பில் சிறிய மூன்று நிலை கோபுரம், மகா மண்டபம், கருவறை என்று அமையப்பெற்றுள்ள இவ்வாலயத்தில் கருவறைக்கு முன் ஞானசம்பந்த பெருமாளும் அகத்திய முனிவரும் அருள்கின்றனர். மூலவர் தொண்டர்கள் நயினார் சுவாமி லிங்கத்திருமேனியாய் அழகுற அருள்பாலிக்கிறார். சுவாமி சந்நிதி பிராகாரத்தில் பரிவார மூர்த்திகளாய் நால்வர், சப்தமாதர், சுரதேவர், அறுபத்து மூன்று நாயன்மார்கள், குருபகவான், கன்னி விநாயகர், மகாலட்சுமி, லிங்க நாதர், சுப்பிரமணியர், துர்கை, சண்டிகேஸ்வரர், நடராஜர் - சிவகாமி அம்மை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள சனீஸ்வர பகவான் தன்கரத்தில் கிளியைத் தாங்கி அருள்பாலிப்பது சிறப்பு வாய்ந்தது.

தொண்டர்கள் நயினார்

பொதிகை மலைவரை சென்று குற்றாலநாதரை வணங்கிவிட்டுத் தெற்கு நோக்கிச் சென்ற திருஞானசம்பந்தரும் அவருடைய தொண்டர்களும் வில்வ வனம் ஒன்றில் ஓய்வெடுக்கின்றனர். அவ்விடத்தில் சிவலிங்கம் ஒன்றை நிறுவி வழிபட நினைக்கும் தம் தொண்டர்களின் ஆசையை நிறைவேற்ற, தை மாதம் அஸ்த நட்சத்திரத்தில் திருஞானசம்பந்தர் ஈசனை நினைத்துப் பதிகங்கள் பாடி வேண்டிக்கொள்கிறார். தென்னாடுடையானும் தாம் சுயம்பாய்க் கோயில் கொண்டிருக்கும் இந்த இடத்தை அகத்திய பெருமான் மூலம் காட்டிக்கொடுக்க, சம்பந்தரின் தொண்டர்கள் தம் விருப்பப்படி இந்தத் தலத்தை எழுப்பி சிவபெருமானை வழிபட்டு மகிழ்ந்தனர்.

பிற்காலத்தில் தேவ பாண்டியன்‌ என்ற பாண்டிய மன்னன் இந்த ஆலயத்தைப் புனரமைத்து வழிபட்டான் என்கிறது தலவரலாறு. இப்படி அகத்திய பெருமானின் வழிகாட்டலால் சம்பந்த பெருமானின் திருவுளத்தால் உருவானதே இந்தக் கோயில் என்கிறது தலவரலாறு.

தொண்டர்கள் நயினார் திருக்கோயில்

வெளிப்புற முன் மண்டபத்தில் நவகிரக சந்நிதியும், பைரவரும் வீற்றிருக்க, வெளிப் பிராகாரத்தில் விநாயகரும், தல விருட்சமாகிய வில்வ மரமும் உள்ளது. மூலவர் சந்நிதிக்கு வடப் பக்கம் அன்னை கோமதி அம்மன் சந்நிதி. வலக்கரத்தில் தாமரை மலரையும் இடதுகரத்தில் அபய முத்திரையும் காட்டி அருள்பாலிக்கும் இந்த கோமதி அம்மனை தரிசித்தால் மனநிம்மதி கிடைக்குமாம்.

இங்குள்ள அம்மன் சந்நிதியில் ஸ்ரீசக்கரம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. எண்கோணம் வடிவ விமானம் உள்ள இவ்வாலயத்தின் வெளிப்பிராகாரத்தில் உள்ள அரசமரத்தடியில் மேற்கு நோக்கிய விநாயகரும் இவருக்குப் பின் கிழக்கு நோக்கிய விநாயகர் என ஒரே இடத்தில் முன்னும் பின்னும் திரும்பிய விநாயகர்களைக் காண்பது அரிதான தரிசனமாய் அமைகிறது.

அரசமரத்தடி விநாயகர்
சுப்பிரமணியர்

திருமணத்தடை மற்றும் செவ்வாய் தோஷம் நீங்க இங்கு வந்து சர்க்கரைப் பொங்கலை நைவேத்தியமாய்ப் படைத்து சிவனருள் பெற்றால் விரைவில் மணம் முடியும் என்கின்றனர். நாகதோஷம் உள்ளவர்கள் இங்குள்ள கோமதி அம்பாளை தரிசித்தால் தோஷம் நிவர்த்தி பெற்று மனநிம்மதியும் கிடைக்கும் என்று சிலிர்ப்போடு சொல்கிறார்கள் இங்குள்ள பக்தர்கள். நெல்லையப்பரை தரிசிப்பவர்கள் அப்படியே இவ்வளவு சிறப்பம்சங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள, தொண்டர்கள் நயினார் சுவாமியையும் தரிசித்துச் செல்லுங்கள். வாழ்வில் நன்மைகள் சூழும்.

கருவூரார் கோபம்

'கூப்பிட குரலுக்கு நேரில் வந்து ஈசன் தனக்கு அருள வேண்டும்' என்று வரம் பெற்றிருந்தார் கருவூர் சித்தர். அதேமுறையில் நெல்லையப்பரை வணங்க நினைத்து நெல்லைக்கு வந்து "நெல்லையப்பா" என்று மும்முறை அவர் அழைத்தபோதிலும் நெல்லையப்பர் வரவில்லை.

இதனால் கோபம் கொண்ட சித்தர் "இவ்விடத்தில் எமக்கு அருள்புரியாத நெல்லையப்பர் இங்கு இல்லை; அதனால் எருக்கும் குருக்கும் இவ்விடத்தில் எழுக" என்று சபித்துச் செல்கிறார். தன்னையறியாமல் இறைவனுக்கே சாபமளித்து, கடுஞ்சினத்தோடு சென்ற கருவூரார் முன் ஜோதி வடிவாய் அருள்புரிந்த நெல்லையப்பர், கருவூராரை இந்தத் தொண்டர்கள் நாயனார் கோயிலுக்கு வரவைத்தார்.

கோமதி அம்மன்

"எதிலும் பொறுமை அவசியம்; பொறுமை இல்லாதோனுக்கு இந்த வையகத்தில் எந்த நன்மையும் கிட்டாது" என்று உபதேசித்து இங்குள்ள சிவலிங்கத்தில் ஜோதி வடிவாய் ஐக்கியமானார். இதனால் கருவூராரின் கோபம் பக்தியாய் மாற, நெல்லையப்பரையும் வணங்கி வழிபட்டுச் சென்றார் கருவூர் சித்தர்.



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்