Header Ads Widget

கோவை: 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெயின்டர்... தாமதமான உதவி; உயிரிழந்த சோகம்!

கோவை, வடவள்ளி வேம்பு அவென்யூ பகுதியில் லோட்டஸ் அப்பார்ட்மென்ட் இருக்கிறது. இந்த அப்பார்ட்மென்ட்டில் பெயின்ட் அடிக்கும் வேலை நடைபெற்று வருகிறது. முரளி என்ற பெயின்டர், அத்திபாளையம் பகுதியைச் சேர்ந்த சந்திரன், சாய்பாபாகாலனி பகுதியைச் சேர்ந்த ஹரிதாஸ் ஆகிய இருவரை வேலைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

அப்பார்ட்மென்ட்

சந்திரன் தொங்கு சாரத்தின் மூலம் பெயின்ட் அடித்திருக்கிறார். மற்ற இருவரும் கயிரை பிடித்திருக்கின்றனர். யாரும் எதிர்பாராத வகையில், கயிறு அறுந்து சந்திரன் தலைகீழாக விழுந்திருக்கிறார்.

நான்கு மாடி கட்டடத்தில் இருந்து விழுந்தவரின், தலையின் பின்பகுதி சுவற்றில் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு கவலைக்கிடமாகியிருக்கிறார். உடன் வேலை செய்தவர்கள் அதிர்ச்சியாகி, என்ன செய்வதென்று அறியாமல் திகைத்துப் போயிருக்கின்றனர்.

பெயின்டர் விழுந்த இடம்

சுமார் ஒரு மணி நேரம் ஆகியும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சந்திரனை, குடியிருப்பு வாசிகளும் கண்டுகொள்ளவில்லை. நீண்ட நேரத்திற்குப் பிறகே 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சந்திரனைப் பரிசோதனை செய்ததில், அவர் ஏற்கெனவே  இறந்துவிட்டது தெரியவந்தது. வடவள்ளி காவல்துறையினர் சந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த பெயின்டர்

உடன் பணி புரிந்தவர்களும், குடியிருப்பு வாசிகளும் உடனே சந்திரனை மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்க வாய்ப்பிருக்கிறது எனக் கூறப்படுகிறது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்