Header Ads Widget

ரஷ்ய எல்லைக்குள் பயங்கர மோதல்... கொல்லப்பட்ட 70 பேர்! - ஊடுருவியது உக்ரைன் படைகள் இல்லையா?!

உக்ரைன் நேட்டோ படையில் இணைய முயற்சி மேற்கொண்டது. இதற்கு ரஷ்ய அதிபர் புதின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் அந்த நாடு தனது முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. இதையடுத்து, உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு புதின் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு பிப்ரவரியில் போர் தொடங்கியது.

ஜோ பைடன் - ஜெலன்ஸ்கி

இதில் இரண்டு நாடுகளுக்கும் கடுமையான சேதம் ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் உக்ரைனுக்கு உதவி செய்துவருவதால், போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்குச் சென்றார். பின்னர் சீன அதிபராக மூன்றாவது முறையாகப் பதவியேற்ற ஜி ஜின்பிங், ரஷ்யாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இது சர்வதேச அரசியலில் புயலைக் கிளப்பியது. பின்னர் ரஷ்யா தனது தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியது. இதனால் இரு தரப்பிலும் கடுமையான சேதம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது உக்ரைனில் இருக்கும் டோனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸ்போரிஷியா, கெர்சான் ஆகிய பகுதிகளில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது, ரஷ்யா. மறுபுறம் உக்கரைனும் கடுமையாக எதிர்த்தாக்குதல் நடத்தி வருகிறது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்

இதற்கிடையில் ரஷ்யாவின் எல்லையில் பேல்கராடு என்ற மாகாணம் இருக்கிறது. இதற்குள் உக்ரைனில் நாட்டிலிருந்து உக்ரைன் ஆதரவு படையினர் நுழைந்து தாக்குதல் நடத்தினர். பின்னர் அதே பகுதியில் இருக்கும் கிரேவ ரான் என்ற இடத்தில் உக்ரைன் ஆதரவு படையினருக்கும், ரஷ்யப் படையினருக்கும் இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டது.

உக்ரைன் பாக்முட் நகரம்

மேலும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், பெல்கராட் மாகணத்தில் பயங்கரவாத அவசரநிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் இந்தப் பிரச்னையில் சிக்கி பொதுமக்கள் 8 பேர் காயமடைந்தனர் என அந்த மாகாணத்தின் ஆளுநர் வியாசெஸ்லவ் கிளாட்கோவ் கூறினார்.

மறுபுறம் 70 உக்ரைன் ஆதரவு படையினர் கொல்லப்பட்டனர். மீதம் இருந்தவர்கள் உக்ரைனுக்குள் விரட்டி அடிக்கப்பட்டனர் என ரஷ்யாவின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் தெரிவித்தார். இதையடுத்து அந்த மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை உத்தரவும் வாபஸ் பெறப்பட்டது.

ரஷ்ய அதிபர் புதின்

ஆனால் இதை உக்ரைன் மறுத்திருக்கிறது. இது குறித்து அந்த நாட்டின் ராணுவ அதிகாரிகள், ``ரஷ்யாவில் நடந்த தாக்குதலில் ரஷ்ய விடுதலைப் படை, ரஷ்ய தன்னார்வ படை ஆகிய இரண்டு கிளர்ச்சி குழுக்கள்தான் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதில் ரஷ்யர்கள்தான் இருக்கிறார்கள். உக்ரைன் ராணுவத்துக்கு எந்த தொடர்பும் இல்லை" எனத் தெரிவித்திருக்கிறது.

பின்னர் இது குறித்து கருத்து தெரிவித்த ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கேய் ஷாயிகு, "பெல்கராட் எல்லை மாகாணத்துக்குள் நுழைந்து, உக்ரைன் தேசியவாதிகள் நடத்திய தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டிருக்கிறது. இதில் 70-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

உக்ரைன் போர்!

எஞ்சியவர்கள் மீண்டும் உக்ரைனுக்கே விரட்டியடிக்கப்பட்டனர். ஊடுருவல் நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் தக்கபதிலடி கொடுக்கப்படும்" எனக் கூறியிருந்தார். இதற்கிடையில் இந்த தாக்குதலுக்கு ரஷ்ய விடுதலைப் படை, ரஷ்ய தன்னார்வ படை ஆகிய ஆயுதக்குழுக்கள் பொறுப்பேற்றன.

இது குறித்து அவர்கள், "புதினின் ஆட்சியிலிருந்து ரஷ்யாவையும், ரஷ்ய மக்களையும் காப்பதற்காக தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான ரஷ்ய படையினர் இறந்திருக்கிறார்கள்" எனத் தெரிவித்திருக்கின்றனர். உக்ரைன் - ரஷ்யா இடையே ஓராண்டுக்கும் மேலாகப் போர் நடந்து வரும் நிலையில், திடீரென நடந்திருக்கும் இந்தத் தாக்குதல் சம்பவங்கள் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.



from India News https://ift.tt/zcB5Vlv
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்