திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே வசிக்கும் 33 வயது பெண்ணுக்கு 12, 10 வயதுகளில் இரு மகள்களும், 8 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். அந்தப் பெண்ணின் கணவர் உடல்நலக்குறைவால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன் பிறகு தூத்துக்குடியைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான முத்துப்பாண்டி என்பவரை, அந்தப் பெண் திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து அந்தப் பெண், குழந்தைகளுடன் முத்துப்பாண்டி தாராபுரம் அருகில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், முத்துப்பாண்டிக்கு உடல்நிலை சரியில்லாததால், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது, அருகில் அனுமதிக்கப்பட்டிருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த சுரேஷ் ஃபெர்னாண்டோ (50) என்பவருடன், அந்தப் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, முத்துப்பாண்டியை மருத்துவமனையில் விட்டுவிட்டு, சுரேஷ் ஃபெர்னாண்டோவுடன் அந்தப் பெண் தன்னுடைய வீட்டுக்கு வந்திருக்கிறார்.
அப்போது, ஃபெர்னாண்டோ இரவு நேரங்களில் அந்தப் பெண்ணின் 12 வயது மகளை, பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கிறார். இதனால், அந்தச் சிறுமி பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார். சிறுமி பள்ளிக்கு வராததால், பள்ளி தரப்பிலிருந்து வீட்டுக்குவந்து சிறுமியிடம் விசாரித்திருக்கின்றனர். அப்போது, சுரேஷ் ஃபெர்னாண்டோவால் அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது. இது குறித்து சமூகநலப் பாதுகாப்பு அலுவலருக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சமூக நல அலுவலர்கள், தாராபுரம் மகளிர் போலீஸார் நடத்திய விசாரணையில் சுரேஷ் ஃபெர்னாண்டோ தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதற்கு தன்னுடைய தாய் உடந்தையாக இருந்ததாகவும் சிறுமி கூறியிருக்கிறார். மேலும், வீட்டருகில் வசிக்கும் 15 வயது சிறுவர்கள் இருவரும், தனக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்ததாகத் தெரிவித்தார். இதையடுத்து சிறுமியின் தாய், சுரேஷ் ஃபெர்னாண்டோ, 2 சிறுவர்கள் உட்பட 4 பேரையும் போக்சோ சட்டத்தில் கைதுசெய்தனர். அந்தச் சிறுவர்களை தவிர்த்து மற்றவர்களை நேற்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையிலடைத்தனர். சிறுவர்களை கூர்நோக்கு இல்லத்தில் அனுமதித்தனர்.
from Latest news

0 கருத்துகள்