நெல்லை மாவட்டம் திருவேங்கடநாதபுரம் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் தினமும் ஏராளமானோர் குளித்து வருகிறார்கள். வழக்கம்போல நேற்று (08-05-2023) அப்பகுதியில் சிலர் குளித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். தற்போது தாமிரபரணி ஆற்றில் குறையான தண்ணீரே சென்று கொண்டிருக்கிறது. அதனால் அங்குள்ள ஆழமான இடத்தில் மக்கள் குளித்துக் கொண்டிருந்துள்ளனர்.
சென்னை ராயப்பேட்டை பகுதியில் வசிக்கும் சக்தி என்பவர் சென்னையைச் சேர்ந்த தனது நண்பர்களான ஸ்ரீராம், அருண் வினோத் ஆகியோருடன் உறவினரின் வீட்டுக்கு நெல்லைக்கு வந்துள்ளார். சென்னையில் ரயில்வே தபால் சேவை நிறுவனத்தில் தற்காலிகப் பணியாளராக உள்ள சக்தியும் அவருடன் வந்திருந்த நண்பர்களும் ஆற்றில் குளிக்கச் சென்றிருக்கிறார்கள்.
அந்தப் பகுதியில் அனேகர் குளித்துக் கொண்டிருந்த நிலையில், சக்தியும் அவரது நண்பர்களும் ஆற்றில் குளித்துள்ளனர். மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்த நண்பர்கள், ஆபத்தை உணராமல் அங்குள்ள பள்ளமான பகுதியில் தேங்கிக் கிடந்த தண்ணீருக்குள் சென்றுள்ளனர். அதில் ஸ்ரீராம், அருண் வினோத் ஆகியோர் தண்ணீரில் தத்தளித்திருக்கிறார்கள்.
உடனடியாக அப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள், இருவரையும் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். அதற்குள் இருவரும் தண்ணீருக்குள் மூழ்கி விட்டனர். இருவரையும் தேடியும் கிடைக்காத நிலையில் பேட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
சுத்தமல்லி போலீஸார் மற்றும் பேட்டை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று தாமிரபரணி ஆற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது உயிரிழந்த நிலையில் அருண் வினோத் மற்றும் ஸ்ரீராம் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன. பின்னர் இருவரின் உடல்களையும் உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தீயணைப்புத் துறையினர் அனுப்பி வைத்தனர்.
நண்பருடன் சுற்றுலா வந்து உயிரிழந்த அருண் வினோத் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். உயிரிழந்த மற்றொருவரான ஸ்ரீராம், ஆட்டோ ஓட்டும் தொழில் செய்துள்ளார். சுற்றுலா வந்த இடத்தில் இருவரும் தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சுத்தமல்லி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
from Latest news

0 கருத்துகள்