2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதியன்று மும்பையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு அரங்கேற்றிய தாக்குதலை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. தானியங்கித் துப்பாக்கி, வெடிகுண்டுகளுடன் மும்பையில் இறங்கிய 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாஜ் ஹோட்டல், டிரிடெண்ட் ஹோட்டல், சி.எஸ்.டி ரயில் நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் கண்ணில் படும் அப்பாவி மக்களையெல்லாம் சுட்டுத்தள்ளினர்.
சற்றும் எதிர்பாரா இந்த தீவிரவாத தாக்குதலை எதிர்த்துப் போராடிய தேசிய பாதுகாப்புப் படை மற்றும் மும்பை போலீஸார் மூன்று நாள்களில் தீவிரவாதிகளைச் சுட்டுக்கொன்றனர். உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப் என்ற ஒரு தீவிரவாதியும் நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டு தூக்கிலடப்பட்டார். இந்த நிலையில் மும்பை தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்டு அமெரிக்கச் சிறையிலிருக்கும் பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட கனடா தொழிலதிபர் தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
முன்னதாக இந்த தீவிரவாத தாக்குதலில் அவருக்குத் தொடர்பு இருப்பதாக இந்திய முன்வைத்த கோரிக்கையின் பேரில் அமெரிக்காவில் அவர் கைதுசெய்யப்பட்டார். இந்த நிலையில் தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு கடந்த 16-ம் தேதி கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின்போது, ``ராணாவின் சிறுவயது நண்பர் பாகிஸ்தானிய-அமெரிக்கரான டேவிட் கோல்மன் ஹெட்லி லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு கொண்டிருந்ததையும், ஹெட்லிக்கு உதவுவதன் மூலமும், அவரது நடவடிக்கைகளுக்குப் பாதுகாப்பு கொடுப்பதன் மூலமும், அவர் பயங்கரவாத அமைப்பு மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு ஆதரவளிப்பதை ராணா அறிந்திருந்தார்.
ஹெட்லியின் சந்திப்புகள், அதில் பேசப்பட்டது என்ன, தாக்குதல்களின் திட்டமிடல் ஆகியவை ராணாவுக்குத் தெரியும். சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக ராணா இருந்திருக்கிறார். எனவே பயங்கரவாதச் செயலில் முக்கியக் குற்றத்தை அவர் செய்ததற்கான சாத்தியமான காரணங்கள் இருக்கிறது" என்று அரசு வழக்கறிஞர்கள் வாதாடினார். ஆனால் ராணாவின் வழக்கறிஞர் இதற்கு மறுப்பு தெரிவித்தார். இறுதியில் நீதிபதி ஜாக்குலின் சூல்ஜியன் (Jacqueline Chooljian), ``மேற்கூறிய வாதங்களின் அடிப்படையில், ராணா மீது முன்வைக்கப்பட்ட குற்றங்களுக்காக அவர் நாடு கடத்தப்படுவார் என்று நீதிமன்றம் முடிவு செய்கிறது" என்று உத்தரவிட்டார்.
from India News https://ift.tt/qVoQbnw
via IFTTT

0 கருத்துகள்