Header Ads Widget

கள்ளச்சாராய விவகாரம்: ``தமிழகத்தில் நடந்த உயிரிழப்புக்கு புதுவை அரசுதான் பொறுப்பு!” - நாராயணசாமி

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதுவையில் கள்ளச்சாராயம் இல்லை என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். மரக்காணத்தில் கள்ளச்சாராய சில்லரை விற்பனை செய்த இருவர், அதனை புதுவையைச் சேர்ந்த இருவரிடம் வாங்கியதாக வாக்குமூலம் கொடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயத்தை புதுவையில் இருந்து கடத்தி சென்று தமிழகத்தில் விற்றதால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கான முழு பொறுப்பையும் புதுவை அரசு ஏற்க வேண்டும். கலால் துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமியும், உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும், அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும்.

பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழகத்தில் காவல்துறை, கலால்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், புதுவையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கள்ளச்சாராய பேர்வழிகளுக்கு புதுவை அரசு உடந்தையாக உள்ளது. காவல்துறை லஞ்சம் வாங்கிக் கொண்டு கள்ளச்சாராய விற்பனையை அரசு வேடிக்கை பார்க்கிறது. கலால் துறை அதிகாரிகள் மாதந்தோறும் பணம் வசூல் செய்து, முதல்வர் ரங்கசாமிக்கு நேரடியாக பணம் தருவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். தற்போது தமிழகத்தில் நடந்த உயிரிழப்புக்கு புதுவை அரசுதான் பொறுப்பு.

கள்ளச்சாராய உயிரிழப்புக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தமிழகத்தில் ராஜினாமா செய்ய வேண்டும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கோரிக்கை வைத்துள்ளார். புதுவையில் பா.ஜ.க, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசு நடக்கிறது. அதனால் அதே கோரிக்கையை முன்வைத்து புதுவையிலும் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ராஜினாமா செய்ய வேண்டும் என  வலியுறுத்துவாரா?  இதற்கு அண்ணாமலை பதில் சொல்ல வேண்டும். முதல்வர் ரங்கசாமியின் ஆணவம்தான் தமிழக உயிர்பலிக்கு முக்கியக்காரணம். என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க ஆட்சியில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியாமல், தமிழகத்துக்கு அனுப்பி உயிர்பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த ஆட்சியாளர்களால் புதுவைக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது.

முதல்வர் ரங்கசாமி

 முதலமைச்சர் ரங்கசாமி எந்த கடவுளை வேண்டினாலும் பாவ மன்னிப்பு கிடைக்காது. கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியாததற்கு முக்கிய காரணம் ஊழல்தான். இதற்கு சி.பி.ஐ விசாரணை வைக்க தயாரா ? மக்கள் கொதித்து போயுள்ளனர். கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவிட்டால் போராட வேண்டிய நிலை ஏற்படும். சில அரசியல் தலைவர்களும் இதில் கைகோர்த்து இருப்பதால் அவர்கள் வாயை திறக்க மாட்டார்கள். தமிழக உயிரிழப்புக்கு புதுவை  முதல் அமைச்சர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்” என்றார்.



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்