Header Ads Widget

``முதல்வர் ஒப்பந்தமிட்ட நோபல் நிறுவனத்துக்கும், உதயநிதி ஃபவுண்டேஷனுக்கும் ஒரே முகவரி" - அண்ணாமலை

பா.ஜ.க அரசின் ஒன்பது ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று மாலை மதுரையில் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, "தமிழகம் முழுவதும் ஒரு மாதத்திற்குள் 66 இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் முதல் கூட்டம் இங்கு தொடங்குகிறது. கட்சியில் வேலை செய்கின்ற கிளைத் தலைவர்கள் மண்டல் தலைவர்கள் எவ்வளவு முக்கியம் என்பதற்காக இந்த பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை

இந்த நேரத்தில் வர்ண பகவானும் நம்மை ஆசீர்வதிக்கத் தயாராகி வருகிறார். எந்த நேரத்திலும் மழை வரலாம். கடுமையான வெய்யில் அடித்துக் கொண்டிருந்த நிலையில் பாரதப் பிரதமரின் ஒன்பது ஆண்டுகால சாதனையைப் பேசும் முதல் பொதுக்கூட்டம் தொடங்கும் நாளில் மழை வருவது நல்லதுதான். இது அற்புதமான சகுனம்.

இந்த மழை வருவதன் மூலம் 2024-ல் தமிழகத்தில் நமக்கு ஆண்டவனுடைய ஆசி கிடைத்துவிட்டது என்று தெரிகிறது. நம் நாட்டு சரித்திரத்திலயே 2014 முதல் 2023 வரைதான் மிக முக்கிய ஆண்டுகள். நாட்டில் கடைக்கோடியில் வாழும் ஒரு ஏழைக்கு என்ன வேண்டும் என்பதை நம் பிரதமர் உற்றுநோக்கி அனைத்தையும் வழங்கியுள்ளார். நம் பிரதமர் மீது கடுகளவும் குற்றச்சாட்டு வைக்க முடியாத அளவில் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

1500 ஆண்டு பழமையான ஆதீன மடம் இங்குள்ளது. மதுரைக்கென்று தனி இடம் இந்திய அளவில் உலக அளவில் உள்ளது. சங்க காலத்தில் 3 தமிழ்சங்கங்கள், பாண்டித்துரை தேவரால் நான்காம் தமிழ்ச்சங்கம் உருவாக்கப்பட்ட ஊர். அதுபோல் தமிழுக்காக பாடுபடுகிற ஒருவர் உண்டென்றால் அது நம் பிரதமர் மோடிதான். எவ்வளவு செய்திருக்கிறார்,

பொதுக்கூட்டம்

தமிழின் பெருமையை உலகமெல்லாம் எடுத்திட்டு போயிருக்கிறார். ஐநா சபை முதல் காசி தமிழ்ச்சங்கமம் வரை தமிழை திருக்குறளை எடுத்து சென்றிருக்கிறார்...( அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே மழை வந்துவிட்டது...)
'மழை பெய்தாலும் நான் பேசிக்கொண்டிருப்பேன். உங்களை கட்டாயப்படுத்தவில்லை, நிற்பதற்கு தயாராக இருந்தால் நான் தொடர்ந்து பேசுவேன்.

செங்கோல் வழி ஆட்சி இருக்க வேண்டுமென்பதற்காக ராஜாஜியால் ஏற்பாடு செய்யப்பட்டு நேருவுக்கு வழங்கப்பட்ட செங்கோலை வாக்கிங் ஸ்டிக்காக மாற்றி அலகாபாத் ஆனந்த்பவனில் வைத்துவிட்டார். இன்று அந்த செங்கோலை திருவாசகம் பாடி, பதிகம் பாடி புதிய நாடாளுமன்றத்தில் தமிழ் ஒலிக்கச்செய்து வைத்துள்ளனர். புதிய நாடாளுமன்றத்தில் பேசப்பட்ட முதல் மொழி தமிழ். தமிழகத்திலிருந்து 21 ஆதீனங்களை அழைத்து, நம் நாதஸ்வரக் கலைஞர்கள், ஓதுவார்களை அழைத்து பிரதமர் பெருமைப்படுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்துக்கு எப்போது செங்கோல் போனதோ அப்போதே தெரிந்துவிட்டது தமிழகத்தில் அறம் சார்ந்த ஆட்சி அமையப்போகிறது என்பது. அந்த அறம் சார்ந்த ஆட்சி 2024-ல் அமையப்போகிறதா? 2026-ல் அமையப்போகிறதா என்பது விரைவில் தெரியும்.

ஆனால், தி.மு.க ஆட்சிக்கும் அறத்துக்கும் சம்பந்தமில்லை. தமிழக முதலமைச்சர் ஜப்பானில் இருந்துகொண்டு பிரதமருக்கு எதிராக ட்வீட் போட்டுக்கொண்டிருக்கிறார். தமிழகம் வந்து சொல்வோம் என்ற பொறுமை கூட அவரிடம் இல்லை. அவ்வளவு வயிற்றெரிச்சல். நம்முடைய ஆட்சியில் எந்தவொரு ஊழலும் இல்லை என்றால் வயிற்றெரிச்சல் வரத்தானே செய்யும்.

அண்ணாமலை

ஆனால், தி.மு.க அரசின் இரண்டாண்டு ஆட்சியில் 'டி.எம்.கே. ஃபைல்ஸ் பார்ட்-1' ஐ வெளியிட்டோம். அவர்களின் 1,34,000 கோடி ரூபாய் சொத்துக்கு கணக்கு கேட்டுள்ளோம். அவர்கள் அந்த பணத்தை வெளிநாட்டில் பதுக்குகிற நிறுவனத்தின் பெயரை தெரிவித்தோம். அதைத்தொடர்ந்து முதல்வர் குடும்பம் முப்பதாயிரம் கோடி சம்பாதித்துள்ளதாக மதுரை மண்ணைச் சேர்ந்த அமைச்சரும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதற்கு அவருடைய துறையை மாற்றி தூக்கி போட்டதுதான் பரிசு. முதல்வர் குடும்பத்தை விமர்சித்தால் என்ன கதி என்று அறிவாலயம் அமைச்சருக்கு பாடம் புகட்டியுள்ளது.

இந்த ஊழலை இன்னும் முன்னால் எடுத்துச்சென்றால், உதயநிதி ஃபவுண்டேஷனில் நிற்கிறது. அமைச்சர் அன்பில் மகேஸ் அந்த ஃபவுண்டேசனை நடத்துகிறார். கடந்த வருடம் நம் முதலமைச்சர் துபாய்க்கு சென்றபோது, நோபல் நிறுவனத்துடன் 1,000 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டு வந்தார். இன்று உதயநிதி ஃபவுண்டேசனை அமலாக்கத்துறை ரெய்டு பண்ணி, அக்கவுண்டை சீல் பண்ணி சட்டத்துக்கு புறம்பாக நிதியை பெற்றுள்ளார்கள் என்று அந்த ஃபவுண்டேசனை நிறுத்தி வைத்துள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், துபாயில் நோபல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டது அவங்க பணத்தை கொண்டு போய் திரும்ப கொண்டுவரத்தான் என்று ஏற்கனவே சொன்னோம். அதற்கு ஆதாரம் கேட்டார்கள். இப்போது சொல்கிறேன்.

அண்ணாமலை

நோபல் பிரிக்ஸ் நிறுவனத்தின் முகவரி, 53/22 கே.ஜி. நடராஜா பேலஸ், சரவணா தெரு, தி.நகர், சென்னை. உதயநிதி ஃபவுண்டேஷன் முகவரியும் அதேதான். எவ்வளவு ஆச்சரியம் பாருங்க. இது போதாதா ஆதாரம்? இதே ஃபவுண்டேசன்ல 2009-ல் உதயநிதி டைரக்டர். அதே முகவரியில் இயங்கக்கூடிய நிறுவனத்தில் கடந்த வருடம் முதலமைச்சர் 1000 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். இதைவிட வெட்கக்கேடான செயல் ஏதுமில்லை. இதுபோல அடுக்கணக்கான குற்றச்சாட்டுகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

கள்ளச்சாரயம் குடித்த 22 பேரின் குடும்பம் இங்க துக்கத்துல இருக்கும்போது, முதலமைச்சர் ஜப்பானில் சொகுசாக இருக்கிறார். தமிழகத்தை கள்ளச்சாரயம் மிகுந்த மாநிலமாக தி.மு.க அரசு மாற்றியுள்ளது. இந்த அரசு அகற்றபட வேண்டும்" என்று விரைவாக பேசிவிட்டு கிளம்பினார்.

வந்திருந்த கட்சியினர்

முன்னதாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "துறை மாற்றப்பட்ட அமைச்சர் பி.டி.ஆரை தாங்கள் மிகவும் மதிக்கிறோம். அவர் எந்த தவறும் செய்யவில்லை, பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்தவர், அவர் மீது தி.மு.க அரசு எடுத்த நடவடிக்கை மதுரை மண்ணுக்கு செய்த துரோகம்" என்றும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.



from India News https://ift.tt/mu2nNMH
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்