மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான எல் சால்வடாரில் (El Salvador), கால்பந்து மைதானத்துக்குள் பொதுமக்கள் நுழையும்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், 12 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம், தலைநகர் சான் சால்வடாரிலுள்ள கஸ்கட்லான் மைதானத்தில் கடந்த சனிக்கிழமையன்று அலியான்சா (Alianza) மற்றும் சாண்டா அனாவை தளமாகக் கொண்ட ஃபாஸ் (Fas) ஆகிய உள்ளூர் அணிகளுக்கிடையிலான இடையிலான போட்டியின்போது நடந்திருக்கிறது.
முன்னதாக போட்டி ஆரம்பிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் மைதானத்தின் நுழைவுவாயிலின் உள்ளே நுழைவதற்கு பொதுமக்களிடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது. அப்போது அங்கிருந்தவர்கள் ஆரவாரத்தில் உள்ளே நுழைந்தபோது, சுமார் 12 பேர் நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
திடீரென இவ்வளவு கூட்டம் ஏற்பட்டதற்குப் போலி டிக்கெட்டுகள் விற்கப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பு சந்தேகப்படுகிறது. இது குறித்து பேசிய ரசிகர் ஒருவர், முழு மைதானத்திலும் இரண்டு வாயில்கள் மட்டுமே திறந்திருந்ததாகத் தெரிவித்தார்.
இதற்கு இரங்கல் தெரிவித்த ஃபிஃபா (FIFA) தலைவர் கியானி இன்ஃபான்டினோ, ``எல் சால்வடாரில் நடந்த சோகமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்ன்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என அறிக்கை வெளியிட்டார்.
மேலும் எல் சால்வடார் அதிபர் நயீப் புகேலே தன் ட்விட்டர் பக்கத்தில், ``அணிகளின் மேலாளர்கள், மைதான டிக்கெட் அலுவலர்கள் உட்பட அனைவரும் விசாரிக்கப்படுவார்கள். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படாமல் விடமாட்டாது" என ட்வீட் செய்திருந்தார்.
from Latest news

0 கருத்துகள்