Header Ads Widget

Tamil News Live Today: `ஹிரோஷிமாவில் உள்ள மகாத்மா காந்தி சிலை, அகிம்சை சிந்தனையை முன்னெடுத்துச் செல்லும்' - பிரதமர் மோடி

`ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தி சிலை' - திறந்து வைத்த பிரதமர் மோடி

ஜப்பான் நாட்டுக்கு சென்றிருக்கும் பிரதமர் மோடி, ஹிரோஷிமா நகரில் மகாத்மா காந்தியின் சிலையை திறந்து வைத்தார். பின்னர் பேசிய பிரதமர் மோடி, ``இன்றும் ஹிரோஷிமா என்ற வார்த்தையைக் கேட்டாலே உலகமே பயந்து போகிறது. ஜி7 மாநாட்டிற்காக ஜப்பான் வந்திருக்கும் இந்த வேளையில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இன்று உலகம் பருவநிலை மாற்றம் மற்றும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

ஹிரோஷிமாவில் உள்ள மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை அகிம்சை சிந்தனையை முன்னெடுத்துச் செல்லும். ஜப்பானியப் பிரதமருக்கு நான் பரிசளித்த போதி மரம் இங்கு ஹிரோஷிமாவில் நடப்பட்டது என்பதை அறிந்துகொண்டது எனக்கு ஒரு சிறந்த தருணம். மக்கள் இங்கு வரும்போது அமைதியின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும். மகாத்மா காந்திக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்.

ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை வைத்து, அதைத் திறக்க எனக்கு வாய்ப்பளித்த ஜப்பானிய அரசுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நாம் அனைவரும் மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி உலக நலன் பாதையில் நடக்க வேண்டும். மகாத்மா காந்திக்கு இதுவே உண்மையான அஞ்சலியாக இருக்கும்” என்றார்.

கர்நாடக முதல்வராக இன்று பதவியேற்கிறார் சித்தராமையா!

கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் முதலமைச்சராக சித்தராமையாவையும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரையும் தேர்வு செய்தது. அவர்கள் இருவரும் இன்று பதவியேற்று கொள்கின்றனர். சித்தராமையா இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்க இருக்கிறார். கடந்த முறை சித்தராமையா முதலமைச்சராக பதவியேற்ற அதே கண்டீரவா மைதானத்தில் இம்முறையும் விழா நடைபெறுகிறது. இதற்காக, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதோடு, பதவியேற்புக்கான ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

சிவக்குமார், சித்தராமையா

மேலும், முதல்வராக பதவியேற்கும் சித்தராமையாவுடன், 8 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக 20 அமைச்சர்கள் வரை பதவியேற்பார்கள் எனக் கூறப்பட்ட நிலையில், 8 பேர் மட்டுமே இறுதி செய்யப்பட்டதாக பெங்களூருவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



from India News https://ift.tt/1WPHISC
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்