புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்லும் மல்யுத்த வீரர்கள்!
இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் மாதக்கணக்கில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர் கைதுசெய்யப்பட்டு, தங்களுக்கு நீதி கிடைக்கும் வரையில் இந்தப் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என அவர்கள் உறுதியாகக் கூறி வருகின்றனர்.



இத்தகைய சூழலில் இன்று டெல்லியில் புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா நடைபெறும் நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கி மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் பேரணியாகச் செல்லவிருக்கின்றனர். மேலும், வீரர்களுக்கு ஆதரவாக விவசாயிகள் மற்றும் பஞ்சாயத்துத் தலைவர்களும் பேரணியில் பங்கேற்கவிருக்கின்றனர். அதன் காரணமாக டெல்லியில் பரபரப்பு நிலவுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கும் போலீஸார், சிங்கு எல்லைப் பகுதி அருகே தடுப்புகளை அமைத்து பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கின்றனர்.
புதிய நாடாளுமன்றம் திறப்பு!
டெல்லியில் இன்று புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். புதிய நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் இருக்கைக்கு அருகே தமிழ்நாட்டின் செங்கோல் நிறுவப்படுகிறது. அதன் காரணமாக இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டு ஆதீனங்கள் 20 பேர் கலந்துகொள்ளவிருக்கின்றனர். மதியம் 2:30 மணிக்கு பிரதமர் இந்தக் கட்டடத்தை திறந்து வைப்பார் எனக் கூறப்படுகிறது.
மேலும், இந்தத் திறப்பு விழாவின் நினைவாக ரூ.75 நாணயமும், அஞ்சல் தலையும் வெளியிடப்படவிருக்கின்றன.
from India News https://ift.tt/bW1FGiZ
via IFTTT

0 கருத்துகள்