வீட்டுக் கடன் வாங்குபவர்களின் சொத்து ஆவணங்களை வங்கிகள் தொலைத்துவிடும்பட்சத்தில், வங்கிகளுக்கு அபராதம் விதிக்கும்படி ரிசர்வ் வங்கிக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே, வங்கிகளில் கடன் வாங்க நினைப்பவர்கள், வீட்டுப் பத்திரத்தையும், அதைச் சார்ந்த ஆவணங்களையும் வங்கியில் கொடுத்த, பின்பே அவர்களுக்குக் கடன் வழங்கப்படும். சில சமயங்களில் வாடிக்கையாளர்களின் சொத்து ஆவணங்களை வங்கிகள் தொலைத்துவிடுவதுண்டு. அதோடு ஆவணங்களைத் தவறாக மாற்றிக் கொடுப்பதும் உண்டு.
வீட்டுக் கடனை முழுமையாகக் கட்டி முடித்த பின்பும், உரிய ஆவணங்களை வழங்காமல், அவர்களை வங்கிகள் இழுத்து அடிப்பதுண்டு. இது போன்ற தவறுகளை வங்கிகள் செய்வதாக `பிபி கனுங்கோ' தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழு நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளது.
வாடிக்கையாளர்களின் நலனைப் பாதுகாக்கவும், வாடிக்கையாளர்களின் சேவைகளை ஆய்வு செய்வதற்கும், மறுபரிசீலனை செய்வதற்கும், இந்தக் குழுவை 2022 மே மாதம் ரிசர்வ் வங்கி அமைத்தது. இந்தக் குழு தற்போது சில பரிந்துரைகளை ரிசர்வ் வங்கிக்குச் சமர்ப்பித்துள்ளது.
அதில், ``வீட்டுக் கடன் வாங்கும் வாடிக்கையாளர்களின் சொத்து ஆவணங்களை வங்கிகள் தொலைத்துவிடும்பட்சத்தில், வங்கிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும் அல்லது வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
வீட்டுக் கடனை முழுமையாகச் செலுத்திய பின்பும், ஆவணங்களைத் தராமல் இழுத்தடிக்கும் வங்கிகளுக்கும் அபராதம் விதிக்க வேண்டும்'' எனப் பரிந்துரை செய்துள்ளது.
இந்நிலையில், இப்பரிந்துரைகள் குறித்த கருத்துகளை ரிசர்வ் வங்கி ஜூலை 7-ம் தேதிக்குள் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
from Latest news

0 கருத்துகள்